
இன்றைய தலைமுறையினர் 4ஜி,5ஜி என அதிவிரைவாக கிடைக்ககூடிய இணைய தொழில்நுட்பத்திற்கு மாறிவருகிறார்கள். இன்றைக்கு இணை வசதிக்காக பயன்படுத்தப்படும் வார்த்தையாக உள்ள 5ஜிக்கு முன்பு நாட்டை அதிரவைத்த 2ஜி பற்றியும் தெரிந்துக்கொள்வது அவசியமாகும். இந்திய விடுதலை வரலாற்றில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தற்போதுவரை இருந்துவருகிறது.
திமுகவைச் சேர்ந்த ஆர்.ராசா ஒன்றிய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கி, இந்திய அரசிற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு 2007 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 10 ஆண்டு காலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு ஒன்றிய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பதவி ஏற்றார் ஆர்.ராசா. இவர் பதவியில் இருந்த பொழுது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமான ஏலம் நடைபெற்றது. இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரு ரூபாயில் பேசலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் 2ஜி அலைக்கற்றை உரிமத்தை பெற பல்வேறு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இவ்வாறு 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதேகாலகட்டத்தில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தை வெளிப்படையாக நடத்த தொலைத் தொடர்பு துறை அமைச்சரான ஆர். ராசாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக 2007 செப்டம்பர் 25ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏலம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வாட்ச் டாக் என்ற என் ஜி ஓ மத்திய கண்காணிப்பு ஆணையத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளித்தது. இதையடுத்து தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் என்று பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள தொலைத் தொடர்பு துறை தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தி இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியா என்பவருடன் ஆர்.ராசா பேசும் உரையாடல் பொதுவெளியில் கசிந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் ஆர். ராசா மீது வழக்கு பதிவு செய்தார். இதனால் ஆர்.ராசா தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் வினோத் ராய் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் இந்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டு அதிர்வலையை ஏற்படுத்தினர். இது இந்தியா முழுவதும் காட்டுத் தீயாக பரவியது.
இதைத் தொடர்ந்து ஆர் .ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டர். தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது தாயார் தயாளு அம்மாள், சந்தோலியா, சித்தார்த் பெஹுரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி, துணைத் தலைவர் ஹரி நாயர், குழும தலைவர் சுரேந்திர பிபாரா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோர் மீதும் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது என்று 17 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2013 ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு 2ஜி ஊழல் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து. அதேசமயம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆர்.ராசா நேரடி சாட்சியமாக தனது வாதங்களை முன் வைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பை இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் 2017ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ அமைப்பு தவறிவிட்டது என்றார்.
மேலும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட சதித்திட்டத்தின் மொத்த உருவமாக ராசா திகழ்ந்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றார் நீதிபதி சைனி. இவ்வாறு நாடோ உற்றுநோக்கிய ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை பெற முக்கிய காரணமாக இருந்தது நீதிமன்றத்தில் ஆ.ராசா முன்வைத்த வாதங்கள்தான். 2ஜி வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால், கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை தன் வாதத்திறமையால் தனி ஆளாக நின்று நீதிமன்றத்தில் வாதாடினார் ஆ.ராசா. தன் வாதத்தின்போது அவர் இப்படிக் கூறினார் "2ஜி வழக்கில் நான் பிணை கோரப்போவதில்லை. இந்த வழக்கில் நான் ஊழல் செய்தேன் என கண்டுபிடித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயார்" என்றார். கிட்டத்தட்ட ராசா கைது செய்யப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் அவரின் வாத திறமையால் ராசா மட்டுமல்லாது திமுகவின் மீது விழுந்த கரும்புள்ளியும் காணாமல்போனது.
அதேபோல் 2ஜி அவிழும் உண்மைகள் எனும் புத்தகத்தை எழுதி, இந்த வழக்கில் தான் கடந்துவந்ததை, நீதிமன்றத்தின் மேற்கொண்ட வாதங்கள் விரிவாக எழுதியுள்ளார் ஆ.ராசா. இதன்பிறகு 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மாபெறும் வெற்றிபெற்றார் ஆ.ராசா
இந்த நிலையில் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டடை எதிர்த்துகடந்த 2018-ம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.