மொழிபெயர்ப்புக்கு 3 கோடி ரூபாய் - தமிழக அரசின் மெகா திட்டம்!

மொழிபெயர்ப்புக்கு 3 கோடி ரூபாய் - தமிழக அரசின் மெகா திட்டம்!
Published on

சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

'46 ஆண்டுகளில் இல்லாத சர்வதேச புத்தகக் காட்சியை நடத்திக் காட்டியிருக்கிறோம். (பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்) என்ற மகாகவி பாரதியாரின் கனவை நிறைவேற்றக் கூடிய வகையில் பன்னாட்டு புத்தக கண்காட்சியானது நடைபெற்று வருகிறது.

உலக அறிவையும் விரிவையும் தமிழிலே அளிக்கவேண்டுமென்று ஆசைப்பட்ட முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிதான் இந்த பன்னாட்டு புத்தக கண்காட்சி. நமது தமிழ் படைப்புகள் உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும். உலககெங்கிலும் உள்ள அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளை தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் மருத்துவ பாடநூல்கள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தந்தை பெரியாரின் சிந்தனைகளை உலக மொழிகளிலும் இந்தியாவின் 21 மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம்.

தமிழ் நூல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட்டு இருக்கிறோம். பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களை தமிழில் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம். ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றன.

எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நமது மொழியும் வளம் பெறும் சொற்களும் வலிமை பெறும். புதிய இலக்கியங்கள் மட்டுமல்ல, புதிய சிந்தனைகளும் சொற்களும் கிடைக்கும். காலம்தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால்தான் மொழியின் காலமும் நீடிக்கும். ஆங்கிலத்தின் இலக்கிய வளமே மொழி பெயர்ப்பாளர்களால்தான் ஏற்பட்டிருக்கிறது என்று தமிழின் மிக சிறந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான க.நா. சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

நம்முடைய தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டுமானால் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பிலக்கியத்துக்கு இணையான மதிப்பு மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கும் இருக்கிறது. தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய, தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும்.

முதல் முறையாக நடந்த இந்த பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழ் மொழியில் இருந்து பிற இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடு செய்வோம்'

எது எப்படியோ, தமிழறிஞர்களுக்கு அடுத்தடுத்து நிறைய பணிகள் காத்திருக்கின்றன என்பது மட்டும் நிஜம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com