
கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த போது ஸ்மிருதி ராணி எங்கே என்று தேடிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆச்சர்யப்படும்படி, திடீரென்று பெங்களூர் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ.கவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குவோம் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று பெங்களூர் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி அரசியலை முன்னெடுப்பதாக குறிப்பிட்டவர், கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது 54 லட்சம் விவசாயிகள் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள். சிறுதானியம் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வீடுகட்ட ரூ.5 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். சிறுதானியம் சாகுபடி புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் வளமான கர்நாடகத்தை நிர்மாணிக்கும் வகையிலும் பா.ஜ.க தேர்தல் அறிக்கையை தயாரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியை குறை சொல்லி பேச மறந்துவிடவில்லை. இந்துக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏராளமான பொய்கள் சொல்லப்பட்டிருப்பதாகவும் அவற்றையெல்லலாம் அவர்களால் எந்நாளும் நிறைவேற்றமுடியாது என்றும் பேசியிருக்கிறார்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து, தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய ஸ்மிருதி இராணி என்பவரை காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு எட்டு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று சென்ற மாதம் போராட்டம் அறிவித்தது, ஆந்திரப் பிரதேச மகளிர் காங்கிரஸ் அமைப்பு.
ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்காக தெருவில் இறங்கி போராடிய பா.ஜ.க தலைவர் ஸ்மிருதி இராணியின் படத்தை முகமூடியாக அணிந்தபடி ஹைதராபாத்தில் போராட்டம் நடத்தினார்கள். சமையலுக்கான கேஸ் விலை 410 ரூபாய் இருந்தபோது போராட்டம் நடத்திய ஸ்மிருதி இரானி, சிலிண்டர் விலை 1200 ரூபாயாக உயர்ந்திருப்பது குறித்து என்ன சொல்லப்போகிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தலைகாட்டியதும் அல்லாமல், அவருக்குப் பிடித்தமான சப்ஜெக்டான கேஸ் சிலிண்டர் பற்றியும் பேசியிருக்கிறாரே, அது போதாது?