குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட்டேன், அது தவறுதான் என்று சித்த மருத்துவ டாக்டர் ஷர்மிகா விளக்கமளித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தனது சித்த மருத்துவ குறிப்புகள் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர், ஷர்மிகா. அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்று தொடர்ந்து பேசி வந்தவர். குழந்தை பாக்கியம் என்பது நம்முடைய கைகளில் இல்லை. அது கடவுளில் கைகளில் இருக்கிறது என்றெல்லாம் பேசியிருந்தார்.
அனைவருக்கும் சித்த மருத்துவம் என்னும் அடிப்படையில் செயல்பட்டு வருகிறேன். சென்னையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லுரியில் மருத்துவ படிப்பை படித்து சித்தமருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறேன். நான் என்ன படித்தேனோ அதைத்தான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறேன் என்கிறார்.
ஷர்மிகாவின் ஒவ்வொரு பேச்சும் வைரலாகிவிட்டது. அறிவியலுக்கு புறம்பாக, மருத்துவத்துக்கு எதிராக பேசுவதாக அவர்மீது விமர்சனங்கள் எழுந்தது. மாட்டு இறைச்சியால் நிறைய பாதிப்பு வரும் என்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 'நோயில்லா நெறி' புத்தகத்தில் இருக்கிறது. அதனால்தான் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று விளக்கமளித்திருக்கிறார். இவர் பாஜகவின் மாநில சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சியின் மகள் என்பதால் சர்ச்சைக்கு கூடுதல் கவனம் கிடைத்துவிட்டது.
சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2020 ஆண்டுதான் ஷர்மிகா தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்திருப்பதாக திடுக்கிடும் தகவலும் வெளியாகியிருக்கிறது. மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகத் தவறான கருத்துகளைப் பேசும் ஷர்மிகா குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். "யூடியூப்பில் பேசுபவர்கள் மீது புகார் அளிக்கவேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு தனியாகவே ஒரு துறையை தொடங்க வேண்டியிருக்கும்! "