மீரட்டில் பயங்கரம்! 3 கி.மீ. தூரத்திற்கு காரை இழுத்துச் சென்ற டிரக்! திரைப்படக்காட்சி போல் நொடியில் நடந்த சம்பவம்!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், 22 சக்கரங்கள் கொண்ட கண்டெய்னர் டிரக், கார் மீது மோதியதையடுத்து, டிரக்கானது அந்த காரை சுமார் 3 கிமீ வரை இழுத்துச் சென்றதாக, அருகில் இருந்தவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் டிரக்கானது அந்த காரை தள்ளிக்கொண்டு போவதைக் காண முடிகிறது.
எதிர்பாராத விதமாக, அந்த காரில் இருந்த நான்கு பேரும் சரியான நேரத்தில் குதித்ததால் காயம் ஏதும் ஏற்படாமல் அவர்கள் தப்பினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ''கேன்டர் டிரைவர் மீது பார்த்தாபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது காருக்குள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று மீரட் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.
காரில் இருந்தவர்களுக்கும் டிரக் டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அதவாது, டிரக்கை முந்திச் செல்வதற்காக கார் டிரைவர் பலமுறை ஹார்ன் அடித்ததாகவும், பின்னர் காரை டிரக்கின் முன் நிறுத்தியதால் கார் மற்றும் டிரக் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத் தொடர்ந்து, டிரக் டிரைவர் காரை பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கார் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததோடு, அவர்கள் டிரக் டிரைவரிடம் கூச்சலிட்டு, அவரை நிறுத்தச் சொன்னார்கள். ஆனால் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுவதோடு, போலீசார் பின்தொடர்ந்து சென்று அதைத் தடுத்த பின்னரே டிரக்கும் நிறுத்தப்பட்டது.
நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவம், வீடியோவாக வெளியாகி வைரலானதோடு, பார்ப்போரை பதைபைதைக்கவும் வைத்துள்ளது.