
திருச்சியில் நடந்த பள்ளி விழாவின்போது சாமியானா பந்தல் சரிந்து விழுந்ததால் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடந்தது.
அப்பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவ மாணவர்களும் இந்த நிகழ்வைக் காண வசதியாக அமர அங்கு சாமியான பந்தல் அமைக்கப்பட்டது. விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதால் திடீரென சாமியானா பந்தல் சரிந்து விழுந்தது. பந்தல் போட பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்புகள் மாணவர்கள் மீது விழுந்தது. இதில் சில மாணவர்களின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. மேலும் பந்தலுக்குள் இருந்த சில மாணவர்களுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக காயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பள்ளிக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு லேசான காயமடைந்த மாணவர் களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம் அடைந்ததால் தகவல் அறிந்த ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என பெற்றோர் தேடினர். ஒரு சில பெற்றோர் காயம் அடைந்த தங்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த பிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மற்ற குழந்தைகளையும் விருப்பமுள்ள பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என பள்ளி நிர்வாகம் அறிவித்ததால் ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து சாமியானா பந்தல் அமைத்த ஐந்து தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி அஜாக்கிரதையாக சாமியான பந்தலை அமைத்ததாக அதன் பொறுப்பாளர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் கருமண்டபம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாகவே அதிக கூட்டம் இருக்கும் இடத்தில் பந்தலோ சாமியானோவோ அமைத்தால் அதிக கவனமும் அதிக பாதுகாப்பும் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் பள்ளிப் பிள்ளைகள் எனும்போது இன்னும் கவனத்துடன் சாமியானாவை அமைத்திருக்க வேண்டும். காற்றடித்து விழுந்த சாமியானாவின் கீழ் இருந்த பிள்ளைகள் பாதிக்கப்பட்ட தகவல் இதைத்தான் சொல்கிறது. இனியாவது பந்தல் அமைபவ்ர்களும் சாமியானா போடுபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.