ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.3,000; 400 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்: கே.சி.ஆர். தேர்தல் வாக்குறுதி!

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.3,000; 400 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்: கே.சி.ஆர். தேர்தல் வாக்குறுதி!

Published on

ழைப் பெண்களுக்கு மாதாமாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு 400 ரூபாய் விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று பாரத் ராஷ்டிர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகரராவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில்,வரும் தேர்தலில் பி.ஆர்.எஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதியோர், விதவைகளுக்கான மாத உதவித்தொகை ரூபாய் 5,016 ஆக உயர்த்தப்படும், வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் 5 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் மாநிலத்தில் 93 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தற்போது, ‘ரைத்து பந்து’ திட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது 16 ஆயிரமாக உயர்த்தப்படும். ஏழை குடும்பத்துக்கும், ஊடகத்தினருக்கும் 400 ரூபாய் விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

ஆசரா திட்டத்தின் கீழ் முதியோர், விதவைகள், தொழிலாளர்களுக்கு இதுவரை மாதம் 2,016 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முதல் ஆண்டு 3,016 ரூபாயாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 500 ரூபாய் வீதம் உயர்த்தி, இறுதியாக 5 ஆண்டுகளில் அவர்களுக்கு மாதம் 5,016 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது மாத உதவித் தொகை 4,016 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக இது உயர்த்தப்பட்டு 6,016 ரூபாய் வரை வழங்கப்படும்.

இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் 15 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைகள் அளிக்கப்படும். செளபாக்ய லெட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்கள் அனைவருக்கும் மாத உதவித் தொகையாக 3,000 ரூபாய் வழங்கப்படும். அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதா மாதம் ரேஷன் கடைகள் மூலம் உயர் தர அரிசி விநியோகம் செய்யப்படும்.

பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் பேருக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட இலவச வீடு வழங்கப்படும். வீட்டு மனை உள்ளவர்களுக்கு வீடு கட்டி கொள்ள 5 லட்சம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும். ஆதரவற்றக் குழந்தைகளை அரசே தத்து எடுத்து அவர்களை உயர் கல்வி வரை இலவசமாகப் படிக்க வைக்கவும் திட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

119 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கே.சி.ஆர். ஏற்கெனவெ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சந்திரசேகர ராவ் காப்பி அடித்துள்ளதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com