உளவுத்துறை பணிக்கான காலியிடங்கள் குறித்தும், அதற்கு எப்படி விணப்பிப்பது என்பது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத நடவடிக்கைகள் கண்காணிப்பு, எல்லைப் பாதுகாப்பு தொடர்பான உளவுத் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபகாலமாக, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உளவுத்துறையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய பணியிடங்கள், உளவுத்துறையின் கள செயல்பாடுகளையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உளவுத்துறையில் தற்போது சரியாக மொத்தம் 3,717 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. மேலும் mha.gov.in என்ற உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு 1,537 காலி பணியிடங்களும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 442 காலி இடங்களும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 946 இடங்களும், பட்டியல் சமூகத்தினருக்கு 566 காலி பணியிடங்களும், பட்டியல் பழங்குடியினருக்கு 226 காலி பணியிடங்களும் உள்ளன.
விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆகஸ்ட் 10, 2025 நிலவரப்படி விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 27 ஆண்டுகள் வரையில் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
முதலில் எழுத்து தேர்வு, இதில் 100 மதிப்பெண்களுக்கு 100 அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இருக்கும். இந்த தேர்வினை 1 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் 0.25 மதிப்பெண் வழங்கப்படும். விளக்கத்தேர்வு 50 மதிப்பெண்களுக்கும், நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.
நுழைவு கட்டணம்:
பொது, ஓ.பி.சி., ஈ.டபிள்யூ.எஸ் ஆகிய பிரிவுகளுக்கு 650 ரூபாய், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 550ரூ ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
பதிவு செய்யும் முறை:
முதலில் mha.gov.in என்ற உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் IB Recruitment என்ற லிங்கை க்ளிக் செய்து கேட்கப்படும் தகவல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
பின் புகைப்படங்கள், கையெழுத்து ஆகியவற்றையும் நிரப்ப வேண்டும்.
இறுதியில் கட்டணம் செலுத்திவிட்டு சப்மிட் செய்துவிடவும்.
விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்...