உத்தரகாண்ட் மாநிலத்தில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லை வரை செல்லும் நீலாபாணி - முலிங் லா (Nelapani - Muling La) இடையே 16,000 அடி உயரத்தில், 32 கிலோமீட்டர் தூரத்திற்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் இந்த முலிங் லா மலைப்பகுதி அமைந்துள்ளது.
இது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்துடன் இணைக்கும் பழங்கால வர்த்தக மற்றும் பயணப் பாதையாக இருந்தது. இமயமலையில் மிக உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியை அடையத் தற்போது சாலை வசதி இல்லை. இப்போது நீலாபாணியில் இருந்து மலையேற்றம் (Trekking) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இப்பகுதியை அடையத் தற்போது ஐந்து நாட்கள் வரை ஆகிறது.
பிஆர்ஓ (BRO) மூலம் புதிய திட்டம்: நீலாபாணி - முலிங் லா இடையே 32 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணியை பிஆர்ஓ (Border Roads Organization) எனப்படும் எல்லைச் சாலை நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பொறியியல் ஆலோசனை நிறுவனங்களிடம் பிஆர்ஓ ஒப்பந்தம் கோரியுள்ளது. தேர்வாகும் நிறுவனம், மலைப்பாதையின் மண் தன்மை மற்றும் புவியியல் அமைப்பை ஆய்வு செய்து, எங்குச் சாலை அமைக்கலாம், பனிச்சரிவைத் தடுப்பது எப்படி என்பது குறித்து அறிக்கை அளிக்கும்.
அனைத்து வானிலைகளிலும் திபெத் எல்லையை அடையும் வகையில் இந்தச் சாலை கட்டமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சீன எல்லையில் அசாதாரணமான சூழ்நிலை நிலவும் போது, இந்தியப் படைகளைச் சில மணி நேரங்களிலேயே அந்தப் பகுதிக்குக் கொண்டு செல்ல முடியும்.
இது குறித்து பிஆர்ஓ அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 2020-ல் லடாக்கில் சீனப் படைகளுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எல்லைகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த உயர் மட்ட மலைப்பாதை அமைக்கப்படுகிறது. இமயமலையில் இவ்வளவு உயரத்தில் சாலை அமைப்பது மிகவும் சவாலான பணியாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர்.