
ஒரு வீட்டில் உள்ள அனைவரும் பணிக்குச் செல்லும் போது வீட்டுச் சாவியை அக்கம்பக்கம் தந்து செல்வது அன்றைய வழக்கம். ஆனால், ஒருவருக்கொருவர் முகம் தந்து பேசும் நேரமின்றி இருக்கும் அவசரக் காலத்தில் வீட்டுச் சாவியை அவரவருக்கு தெரிந்த வகையில் வீட்டின் அருகேயே வைத்துச் செல்வது வழக்கமாகி விட்டது. ஆனால், அந்த வீட்டினருக்கு மட்டும் தெரியும் இந்த ரகசியம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் ..? இதோ சேலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவமே என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது.
சேலத்தில் இஎஸ்ஐ ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில்தான் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 32 பவுன் நகைகளை மர்ம நபர்கள் துணிகரமாக எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபரம் இதோ...
சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி கவிதா வயது 40 . இவர் சேலம் சித்தனூரில் உள்ள இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் இளநிலை உதவியாளராக பணியில் உள்ளார். இவர் நேற்று முன்தினம் பணிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்தே கிடந்ததைப் பார்த்து சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது.
அவர் அறையிலிருந்த பீரோ திறந்திருந்ததுடன் அதிலிருந்து துணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த முப்பது பவுனுக்கும் மேற்பட்ட நகைகள் காணாமல் போயிருந்தன. உடனே இதைப்பற்றி தகவல் அறிந்து சேலம் மேற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்தனர். நகைகள் களவு போனது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு பீரோ உள்ள இடங்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கவிதாவின் கணவர் செந்தில்குமார் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இவரின் மகள் வெளியூரில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். மகன் இவருடன் தங்கி சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
எனவே, கவிதா தினமும் பணிக்குச் செல்லும்போது வீட்டு சாவியைக் கதவு அருகில் உள்ள ஒரு ஆணியில் மாட்டிவிட்டுச் செல்வதை வழக்கமாககொண்டுள்ளார். மாலையில் அவர் வருவதற்கு முன் வரும் மகன் சாவியை எடுத்து வீட்டை திறந்து வீட்டில் இருப்பாராம். நேற்று கவிதா முன்கூட்டியே வீட்டுக்கு வந்தபோதுதான் வீடு திறந்து கிடந்துள்ளது. இதற்கிடையே கவிதாவின் வீட்டுக்கு உறவினர்களும் நண்பர்களும் என சிலர் வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. எனவே, நகைகள் கொள்ளை போனது தொடர்பாக அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே, கவிதா வீட்டில் திருடு போனது தொடர்பாக ஒரு சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நமக்கு உதவி செய்யத்தான் காவலர்களும் காவல் நிலையங்களும் உள்ளன. ஆனால், அதே சமயம் நாமும் நம் உடமைகளைப் பத்திரமாக காத்து உறுதி செய்ய வேண்டியது கடமையாகிறது. இதுபோன்ற கவனக் குறைவுகளால் நாம்தான் பாதிப்புக்கு உள்ளாவோம் என்பதை புரிந்துகொண்டால் (முக்கியமாக பணிக்குச் செல்பவர்கள் கவனிக்க) நல்லது.