35 வயதானால் வேலை காலி... பயத்தில் சீனர்கள்.

35 வயதானால் வேலை காலி... பயத்தில் சீனர்கள்.

சீன நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கொடுக்கும் அச்சுறுத்தலை பலரும் விமர்சிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 35 வயதிலேயே அந்நிறுவனங்கள் பணியாட்களை வேலையை விட்டு அனுப்பும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமெல்லாம் 20 வயதுக்கு மேல் வேலைக்குச் செல்லத் தொடங்கி, நல்ல வேலை, சொல்லும் அளவு ஊதியம் என்ற நிலையை அடைவதற்கு 10,15 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இன்னொரு பக்கம் 30 வயதுக்குப் பிறகு பல உடல்நல பாதிப்புகள், மனக்கஷ்டங்கள் வரத் தொடங்கிவிடுகிறது. உதாரணத்திற்கு நரைமுடி, முடி உதிர்தல், உடல் எடை அதிகரிப்பு, மனஅழுத்தம் போன்ற பல சிக்கல்கள் நம்மை சூழ்ந்துவிடுகிறது. ஆனால் 35 வயதில் நம்முடைய வேலை பறிபோய்விடும் என்று நாம் கவலைப்பட மாட்டோம். ஏனென்றால் இந்தியாவில் சராசரியாக 55 முதல் 60 வயது வரை ஒரு நிறுவனத்தில் பணியாற்றலாம். 35 வயதில் அனுபவம், துடிப்பு என அனைத்தும் ஒன்று சேர இருக்கும். அச்சமயங்களில் நிறுவனங்கள் ஊழியர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும். 

ஆனால், சீனாவில் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. 35 வயதை எட்டியதும் ஊழியர்களை நிறுவனங்கள் வேலையை விட்டு நீக்கிவிடுகிறார்களாம். இத்தகைய, வேலையில் உத்தரவாதம் இல்லாத சீனர்கள் திருமணம், எதிர்காலத் திட்டம், குழந்தை போன்றவற்றில் நிலைப்புத்தன்மையின்றி தத்தளித்து வருகின்றனர். உலகெங்கிலும் 60 வயதென்பது சராசரி ஓய்வு பெறும் வயதாக இருக்கிறது. ஆனால் சீனாவைப் பொறுத்தவரை 30 பிளஸ் வயது என்பது ஓய்வு பெறுவதற்கு எழுதப்படாத விதியாக உள்ளது. 

இத்தகைய நிலைமை அவர்களின் தனி வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்றால், 35 வயதிலேயே அவர்கள் வேலையை இழக்கும் பட்சத்தில், தன் வாழ்க்கைக்கான இலக்குகளை அடைய முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் சிக்கிக் கொள்கின்றனர். வீடு வாங்குவது, திருமணம் செய்வது என அனைத்துமே இவர்களுக்கு கனவாக மாறிவிடுகிறது. 

சீன நிறுவனங்களின் இந்த அத்துமீறலை விமர்சிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பதிவுகள் வெளி வருகின்றன. "35 வயது என்பது வேலை செய்ய முடியாத தள்ளாடும் வயதுதான். எனவே இனி வீடு வாங்க வேண்டாம், திருமணம் செய்ய வேண்டாம், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம், கார் வாங்க வேண்டாம். தனி நபராக இறுதிவரை சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருந்து கொள்ளலாம்" என விமர்சிக்கும் வகையில் அனைவரும் பதிவு போட்டு வருகின்றனர். 

அதே சமயம், நிறுவனத்தில் நன்றாக பணியாற்றும் ஊழியர்களையே அந்நிறுவனம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக நிறுத்தி விடுகிறார்கள் என்றும் கூறுகின்றனர். இதனால் சீனர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com