மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 33 பேர் உயிரிழந்த சோகம்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த மேடாக் மாவட்டம் பாசமயிலாரம் என்ற இடத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாராகும் மருந்து பொருட்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நேற்று வழக்கம்போல் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த கலவை எந்திரம் திடீரென வெடித்து சிதறியதில் அதன் அருகே இருந்த தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.
உடனே தொழிற்சாலையில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதற்குள் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவி அருகில் இருந்த மற்ற தொழிற்சாலைகளின் கட்டிடங்களும், வீடுகளும் நிலநடுக்கம் ஏற்பட்டது போல் குலுங்கின.
இதற்கிடையே தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பயங்கர வெடி விபத்தால் மருந்து தொழிற்சாலைகளில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் முதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயம் அடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்து 33ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இந்த விபத்து குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளார்.

