
ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் பயணிகள் பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலியானார்கள். கிஷ்டுவார் என்னுமிடத்திலிருந்து ஜம்முவுக்கு அந்த பேருந்து சென்றபோது அஸ்ஸார் பகுதியில் திருங்கல் என்னுமிடத்தில் சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில் மொத்தம் 55 பயணிகள் இருந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் உள்ளூர் நிர்வாகத்தினரும் போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதலில் வந்த தகவலில் 20 பேர் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் விபத்தில் 38 பயணிகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளதாக விபத்து நடந்த இடத்தை மேற்பார்வையிட்ட தோடா எஸ்.எஸ்.பி. அப்துல் கயூம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தினருக்கு அவர் உத்தரவிட்டார்.