ரஷ்யா உக்ரைன் போருக்கு நடுவே உக்ரைன் அமைச்சரவையில் 4 முக்கிய அமைச்சர்கள் திடீர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் தீராக்கதையாக இருந்து வருகிறது. ரஷ்யாவிடம் போரை நிறுத்தக்கோரி பல நாடுகள் கூறியும், அதனைக் கேட்காமல் போரைத் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை, கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகளால் உக்ரைன் தாக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற ரஷ்யாவின் பலம்வாய்ந்த தாக்குதல்களிலிருந்து, உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது.
இந்தநிலையில், பல உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களும் பணமும் கொடுத்து உதவி செய்து வருகின்றன. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது. மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும், பாராளுமன்றத்திற்கான கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் அமைச்சா்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலை தற்போது துணைப் பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சா் ஒலெக்சாண்ட்ர் கமிஷின் உட்பட நான்கு பேர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த ராஜினாமாவிற்கு என்ன காரணம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், போர் சமயத்தில் ஒரே நேரத்தில் நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்தது உலக நாடுகள் மத்தியில் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.