மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த சுமார் 30 ஆண்டுகள் பழமையான பாதசாரி பாலம் ஒன்று நேற்று பிற்பகல் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தலேகாவ் அருகே உள்ள குண்டமாலா பகுதியில் உள்ள இந்த பாலத்தில், கனமழை காரணமாக ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடினர். பாலம் இடிந்து விழுந்தபோது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் மூவர் சந்திரன் காந்த் சத்லே, ரோஹித் மானே மற்றும் விஹான் மானே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்தவுடன் தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பாலம் சேதமடைந்துள்ளதாக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தும், சுற்றுலாப் பயணிகள் அதைப் பொருட்படுத்தாமல் பாலத்தை பயன்படுத்தியுள்ளனர். பாலத்தின் மீதிருந்த அதிகப்படியான எடை காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர்தான் விமான விபத்து ஏற்பட்டு பலர் பலியாகினர். இதனைத்தொடர்ந்து பாலம் இடிந்து விழுவது உட்பட பல விபத்துக்கள் ஏற்பட்டு மக்களை காவு வாங்கி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எமனின் பசி எப்போது தீருமோ? என்று மக்கள் உயிரை கையில் பிடித்து சுற்றுகின்றனர்.