நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் நான்கு வழி சாலை பணிகளை விரைவில் துவங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு தனி கட்டிடம் கட்ட ரூ.140 கோடி நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்டித் தரும்படி மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
போக்குவரத்து நெரிசலை குறைக்க காரோடு முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்று வந்த 4 வழிச்சாலை பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், எம்,பி விஜய் வசந்த் அளித்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:
காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பணி முடங்கிய காரணத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் 2022 டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் விடப்பட்டது.
2023 ஜனவரி மாதம் 3ம் நாள் டெண்டர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது பின்னர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப்படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் நான்கு வழி சாலை பணிகள் மீண்டும் துவங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது. எனவே இதை கருத்தில் கொண்டு தங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக நான்கு வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிகாட்ட வேண்டும்.
அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து,
கன்னியாகுமரியில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் என்று அமைச்சரை சந்தித்து கடிதம் அளித்தார்.
அமைச்சரிடம் அவர் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகள் மற்றும் தேவையான கட்டிடங்கள் இல்லை.
இதனால், உயர் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்க வசதியின்றி மதுரை, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். உயர் மருத்துவ சிகிச்சைக்கு தனியாக சகல வசதிகளுடன் கூடிய ஒரு பன்முக கட்டிடம் தேவைப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 18 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய ஒரு பெரிய நவீன மருத்துவமனையாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமே உள்ளது.
இங்கு இதயம், நரம்பியல், மூளை சம்பந்தமான 11 உயர்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவக் குழு உள்ளது. ஆனால் உள் நோயாளிகள் படுப்பதற்கு 80 படுக்கைகளைக் கொண்ட ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட பழைய கட்டிடம் மட்டுமே உள்ளது. ஆதலால், சிகிச்சை தேடி வரும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்காக பிரத்தியேக பன்முக பிரிவு மற்றும் அதற்கான கட்டிடம் வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கையை எழுப்பி இருந்தது. இக்கட்டிடத்திற்காக, பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரமம் (PMJVK) திட்டத்தின் கீழ் 140 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக் கொண்டார்.