குழந்தை உள்ளிட்ட 4 பேர் தீ வைத்து கொலை

குழந்தை உள்ளிட்ட 4 பேர் தீ வைத்து கொலை

கடலூரில் முன்விரோதம் காரணமாக குழந்தை உள்ளிட்ட 4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி செல்லாங்குப்பம். இங்கு தமிழரசி என்பவர் கணவர் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தமிழரசியின் சகோதரி தனலட்சுமிக்கும் அவரது கணவர் சத்குருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. கோபித்துக்கொண்டு தமிழரசி வீட்டுக்கு வந்து விட்டார் தனலட்சுமி. ஆத்திரமடைந்த சத்குரு, தனலட்சுமியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனலட்சுமிக்கும் அவரது கணவர் சத்குருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தனலட்சுமி கணவர் சத்குரு மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு தனலட்சுமி கணவர் சத்குருவை பிரிந்து சென்று தனது சகோதரி தமிழரசியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இது சத்குருவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சத்குரு தனலட்சுமியை பழிவாங்கும் நோக்கில் தமிழரசி வீட்டுக்கு சென்று சண்டைப்போட்டு உள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் கொண்டு வந்த பெட்ரோலை தனலட்சுமி மீது ஊற்ற தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது அதைத் தடுக்க வந்த தமிழரசி மற்றும் அவரது குழந்தை ஹாசினி மீதும் பெட்ரோலை ஊற்றி உள்ளார். அப்போது சத்குரு மீதும் பெட்ரோல் பட்டுள்ளது. இந்நிலையில் தனலட்சுமி மீது தீ வைத்ததில் அது தமிழரசி அவரது குழந்தை ஹாசினி, மற்றும் தனலட்சுமியின் 4 மாத கை குழந்தை, சத்குரு ஆகியோர் மீது பரவியதால் 4 பேரும் எரிந்து உயிரிழந்தனர்.

இதில் அங்கிருந்த தனலட்சுமியின் தாய் மற்றும் தனலெட்சுமி இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 50 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்குரு வந்த போது பெட்ரோல் கேனுடன் வந்தார். ஆனால் அவர் தீ வைத்து கொலை செய்ய தான் வந்தாரா என்று தெரிய வில்லை கடுங்கோபத்துடன் பெட்ரோல் கேனுடன் வந்தார் என்று சத்குருவை பார்த்த அப்பகுதி மக்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரிடமும் வாக்குமூலம் வாங்கி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடலூர் சுற்று வட்டார பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com