என்எல்சியால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு: உயர்நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Updated on

ன்எல்சி நிர்வாகத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் தனது இரண்டாவது விரிவாக்க பணிக்காக 11 கிலோமீட்டர் பரப்பில் விரிவாக்க பணியை மேற்கொண்டது. இதில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கான இடங்களை கையகப்படுத்துவதில் பத்தாண்டுகளுக்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் நீதிமன்றத்தை நாடினர். இதனால் கையகப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தில் எப்போதும் பயிரிடுவதைப் போன்று தற்போதைய குறுவை சாகுபடிக்கான பயிர்களையும் விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணியை தீவிரமாக முன்னெடுத்துதல் விளைநிலங்கள் அழிக்கப்பட்டன.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க தவறிவிட்டது. நிலங்களை ஒப்படைப்பதற்கான தொகையை பெற்றுக்கொண்டு நிலத்தில் விவசாயம் செய்தது விவசாயிகளின் தவறும் கூட, இவ்வாறு இரண்டு தரப்பிற்கும் 50 : 50 சதவீதம் பங்கு உள்ளது.

ஆனாலும் விளைநிலங்களை சேதப்படுத்தியதை அனுமதிக்க முடியாது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 30 ஆயிரம் இழப்பீடு தருவதாக கூறும் என் எல் சி யின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கூடுதலாக 10 ஆயிரம் சேர்த்து 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். அவற்றை ஆகஸ்ட் 6ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்க வேண்டும்.

அதே சமயம் நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. மேலும் போராட்டக்காரர்கள் சட்டம் ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒத்திவைத்தார்.

logo
Kalki Online
kalkionline.com