40 ஆண்டு பாலம்.. ஒரே நொடியில் மாயம்.. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட காட்சியால் அதிர்ச்சி!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம்Intel
Published on

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை, மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சிம்லா மாவட்டம் கோட்கர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

குலு நகரில் நிலச்சரிவின் காரணமாக வீடு சேதமடைந்ததில் ஒரு பெண் மரணம் அடைந்தார். அதேபோல, நேற்று இரவு, சம்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். குலு - மனாலி சாலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கற்கள் விழுந்துள்ளதால், குலு மணாலியில் இருந்து அடல் சுரங்கப்பாதை மற்றும் ரோஹ்தாங் நோக்கி செல்லும் வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 36 மணி நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் பதின்மூன்று நிலச்சரிவுகள், ஒன்பது திடீர் வெள்ளம் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், 736 சாலைகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன. தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் கங்கை நதியில் ஒரு வாகனம் நிலச்சரிவில் விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மண்டி என்ற பகுதியில் 40 ஆண்டு காலமாக இருந்து வந்த பாலம் ஒரே நொடியில் ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் உறைய செய்கிறது. பாலம் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு வெள்ளநீரில் பாலம் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலையில், சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு நேற்றும் இன்றும் 'ரெட்' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிம்லா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் நேற்றும் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com