உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்த சீனா, தற்போது மக்கள் தொகை வீழ்ச்சி என்ற சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் "ஒரு குழந்தை கொள்கை"யை அமல்படுத்திய சீனா, தற்போது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு சலுகைகளையும், நிதி உதவிகளையும் அறிவித்து வருகிறது.
இந்த அறிவிப்புடன், இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் என சீன அரசு உறுதிப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு மூன்று வயதுவரை இந்த மானியம் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தமாக ஒரு குழந்தைக்கு இந்திய மதிப்பில் 1.30 லட்சம் வழங்கப்படும்.
இந்த சலுகை, நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சி போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இளம் தம்பதிகளை குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும் சீன அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு, சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சியடைந்தது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்கால உழைக்கும் திறன் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
சீனாவின் "ஒரு குழந்தை கொள்கை" 1979 முதல் 2015 வரை அமலில் இருந்தது. இது நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியை கணிசமாகக் கட்டுப்படுத்தியது என்றாலும், ஆண்-பெண் விகிதத்தில் ஏற்றத்தாழ்வு, முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்தது. கொள்கை தளர்த்தப்பட்ட பிறகு, தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர், பின்னர் மூன்று குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், இளம் தம்பதிகளிடையே குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்ததாலும், குழந்தைகளின் வளர்ப்புச் செலவுகள் அதிகரித்ததாலும் பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.
இந்த புதிய நிதி உதவி மற்றும் ஆண்டு மானியத் திட்டங்கள், குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குழந்தை நலன் சார்ந்த பிற சலுகைகள், பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக விடுமுறைகள், குழந்தை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களையும் சீன அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகள், சீனாவின் மக்கள் தொகை நெருக்கடியைத் தீர்த்து, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.