ஒடிசா ரயில் விபத்தால் 44 ரயில்கள் முழுமையாக ரத்து: ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சிறப்பு ரயில்!

ஒடிசா ரயில் விபத்தால் 44 ரயில்கள் முழுமையாக ரத்து:  ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சிறப்பு ரயில்!

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய ரயில் விபத்தின் காரணமாக அந்த வழியே செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தின் காரணமாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் 44 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 38 ரயில்கள் வேறு பாதையில் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது சென்ட்ரல் சாலிமார், கன்னியாகுமரி ஹவுரா, பெங்களூர் துறந்தோ ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது.

தமிழகத்திலிருந்து ஹவுரா செல்லும் அனைத்து ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அத்துடன் இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் குறுகிய தொலைவிற்கு இயக்கப்படும் ரயில்கள் மட்டுமே இன்று இயக்கப்படுகின்றன.

 ரயில்வே
ரயில்வே

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு வந்து சேர முடியாதவர்களையும், பல ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் விபத்து நடந்த இடத்தில் இருந்து சென்னைக்கு திரும்ப முடியாத நிலையில் இருப்பவர்களையும் அழைத்து வருவதற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்கள் உடல்களை கொண்டு வருவதற்கும் தமிழக அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com