சம்பாதித்துப் பிழைக்க உலகத்தில் எத்தனையோ வேலைகள் உள்ளன. செய்யும் வேலையிலும் சம்பாதிக்கும் ஊதியத்திலும் மாற்றங்கள் இருக்குமோ தவிர, அவை அனைத்தும் உடல் உழைப்பு எனும் ஒரு சொல்லுக்குள் அடங்குபவையாகவே இருக்கும். அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்யும் வேலை மிகவும் வித்தியாசமாக உள்ளது.
நியானன் என்னும் பெயர் கொண்ட அந்த நாற்பது வயதுப் பெண் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் செய்தி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த வேலை அவருக்கு மிகுந்த மன உளைச்சலும் பணிச்சுமை நிறைந்ததாகவும் இருந்துள்ளது. இதனால் பெரிதும் அவதிப்பட்ட வந்த அந்தப் பெண்ணின் கஷ்டத்தை அவளது பெற்றோர் அறிந்தனர். அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு மாதம் ஒன்றுக்கு சீன நாட்டின் மதிப்பில் 10,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 1.17 லட்சம் ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இதையடுத்து, அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆலோசனையைக் கொடுத்து இருக்கின்றனர்.
அதன்படி, ‘இதுபோன்று கடினமான வேலையைச் செய்து நீ கஷ்டப்பட வேண்டாம். நீ உனது வேலையை விட்டுவிடு. உனது தேவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தங்களது ஓய்வூதியத்தில் இருந்து 4,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் 47,000 ரூபாயை உனக்கு சம்பளமாகக் கொடுக்கிறோம். எங்களுக்கு நீ முழு நேர மகளாய் இருந்து எங்களுக்குப் பணி புரிய வேண்டும்’ என்று கூறி இருக்கின்றனர். தனது பெற்றோரின் இந்த விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, தான் ஏற்கெனவே செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, தங்களது பெற்றோருக்கு மகளாய் இருக்கும் முழு நேரப் பணியில் சேர்ந்து இருக்கிறார் நியானன்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் நியானன், ‘இந்த வேலை அன்பு நிறைந்த ஒன்றாக இருக்கிறது. தினமும் மாறுபட்ட பணிகளைச் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தினமும் காலை நேரத்தில் ஒரு மணி நேரம் பெற்றோருடன் நடனமாடுகிறேன். அதன் பிறகு கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன். மாலையில் தந்தையுடன் சேர்ந்து சமைக்கிறேன். இது தவிர, எனது பெற்றோருக்கு டிரைவராகவும், குடும்பச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அவர்களை அழைத்துச் செல்லும் பணியையும் செய்து வருகிறேன்’ என்று கூறுகிறார்.
அந்தப் பெண்ணின் பெற்றோரும், ‘இந்த வேலையை விட நல்ல வேலை கிடைத்தால் நீ அதற்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை. அதுவரை இப்படியே உனது பணியை நீ தொடரலாம்’ என்று கூறி இருக்கின்றனர். தற்போது தனது பெற்றோருக்கு முழு நேர மகளாய் இருந்து பணிபுரியும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார் சீனப் பெண் நியானன்.