பொதுத் தேர்வில் மாணவர்கள் ஏன் அதிக அளவில் வரவில்லை என்பது குறித்து இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களோடு ஆலோசிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் அதிக அளவில் வரவில்லை என்றும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைக்கப்படுவதால் மாணவர்கள் அதிக அளவில் தேர்வுக்கு வரவில்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை, மார்ச் 15- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் வரை எழுதுகின்றனர். நடைப்பெற்று வரும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கில தேர்விற்கு 49000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை ஆகியவற்றை முக்கியமான காரணமாக கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர். கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 18 ஆயிரம் மாண வர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை, தனியார் பள்ளிகளில் எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில்,“ மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் ஓரிரு நாளில் விளக்கமாக தெரியப்படுத்தப்படும் என்றும்” என்று தெரிவித்திருக்கிறார்.