

கிறிஸ்துமஸ் உலக அளவில் அதிகளவு மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். ஆனால் இந்த வழக்கம் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. சில நாடுகளில் கிறிஸ்மஸ் கொண்டாடுவது சட்ட விரோதமானது அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. பாதுகாப்பு மற்றும் மதக் கொள்கைகள் காரணமாக சில நாடுகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வட கொரியா, சவுதி அரேபியா, புருனே போன்ற நாடுகளில் பொதுவான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மத சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதோ அல்லது இஸ்லாமியச் சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்படுவதோ இதற்குக் காரணமாகும்.
வடகொரியா: வடகொரியாவில் மதம் என்பது அரசின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. அங்கு அரசுக்கு எதிரான நடவடிக்கையாகக் கிறிஸ்துமஸ் போன்ற மத விடுமுறைகளைக் கொண்டாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்குச் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.
சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் இஸ்லாமியப் பாரம்பரியத்தின் காரணமாகப் பொது இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சிலுவை அடையாளங்கள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
புருனே: எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடான புருனேயில், ஷரியா சட்டத்தின் கீழ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மற்றும் அதன் சின்னங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 20,000 அமெரிக்க டாலர் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் சமூகங்களுக்குள் தனிப்பட்ட முறையில் கொண்டாட அனுமதியுண்டு. ஆனால், பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரம் வைப்பதோ, சாண்டா கிளாஸ் உடை அணிவதோ அல்லது வாழ்த்துச் சொல்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
சோமாலியா: சோமாலியா அரசு 2015-ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறி, அவற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.
தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தானில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பதோ அல்லது பரிசுகளைப் பகிர்ந்து கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு கலாச்சாரத் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவே இத்தகைய தடைகளை அந்நாடு விதித்துள்ளது.