சந்திரயான் 3 பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள். 

சந்திரயான் 3 பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள். 

ஜூலை 14ம் தேதி, வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் சந்திரயான் மூன்று விண்கலத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய உண்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில், ஏராளமான பார்வையாளர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 2019 ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து இது எந்த வகையில் வித்தியாசமானது. மேலும் சந்திரயான் 3-ன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் அறிய வேண்டும். 

1.சந்திரயான் 2ஐ விட மேம்படுத்தப்பட்ட சந்திரயான் -3. 

ந்திரயான் மூன்று திட்டமானது சந்திரயான் இரண்டின் பணிக்கு கிட்டத்தட்ட ஒத்தது என்றே சொல்லலாம். சந்திரயான் இரண்டு விண்கலத்தின் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருவாயில் விபத்துக்குள்ளாகி தோல்வியடைந்தது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்த முறை சந்திரயான் மூன்று திட்டத்தில் பல மேம்படுத்தல்களை செய்துள்ளனர். பெரிய எரிபொருள் தொட்டி, இரண்டுக்கு பதிலாக நான்கு சோலார் பேனல்கள், கூடுதல் சென்சார் கருவிகள், மேம்படுத்தப்பட்ட மென்பொருள், கூடுதலான வலிமை சோதனை போன்ற பல புதிய மாற்றங்கள் இதில் செய்யப்பட்டுள்ளது. 

2.நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்வதன் முக்கியத்துவம். 

டந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரமான செயல்கள் மூலம் இஸ்ரோ தனது திறமையை உலகிற்கு நிரூபித்துள்ளது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பெரிய தலைகளின் கூட்டணியில் இணைவதற்கு, இந்தியாவுக்கு சந்திரயான் மூன்றின் சாஃப்ட் லேண்டிங் முக்கியமாகக் கருதப்படுகிறது. சந்திரனின் மேற்பரப்பில் லேண்டரை முறையாக தரையிறக்காவிட்டால் நிலவை ஆய்வு செய்ய முடியாது. மேலும், எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நோக்கத்திற்கு, கட்டாயம் சந்திரனில் இந்தியா ஒரு சாஃப்ட் லேண்டிங் வெற்றிகரமாக முடித்துத் தன்னை நிரூபிக்க வேண்டும். இது பிற நாடுகள் இந்தியாவைப் பற்றி அறியவும், இந்தியாவின் அடுத்த கட்ட ஆய்வுக்காகவும் பயனுள்ள வகையில் இருக்கும். 

3.பெங்களூருவில் செய்யப்பட்ட Wind Tunnel Test. 

ந்திரயான் 3 விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதைக்கு கொண்டு சென்ற LVM 3 ராக்கெட், பெங்களூருவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலை சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டது. ராக்கெட்டின் காற்று இயக்கவியல் மற்றும் அது பறக்கும்போது அதைச் சுற்றி காற்று எவ்வாறு பாயும் என்பதைப்அ பற்றி விஞ்ஞானிகள் அறிய இது உதவியாக இருந்தது. 

4.ஸ்ரீஹரிகோட்டா இந்தியாவின் ஏவுதலமாக மாறியது எப்படி? 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம், நாட்டிலேயே செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்கள் இரண்டையும் ஏவுவதற்கு பயன் படுத்தப்படும் ஒரே விண்வெளி நிலையமாகும். ஆனால் இது அமைக்கப்படுவதற்கு ஸ்ரீஹரிகோட்டா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியுமா? 

இது கிழக்கு கடற்கரையில் இருப்பதால் கிழக்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவுவதை எளிதாக்குகிறது. ராக்கெட்டுகள் பொதுவாகவே கிழக்கு திசையில் ஏவப்படுகின்றன. ஏனெனில் அவை பூமியின் சுழற்சிக்கு ஏற்ப வேகத்தை அதிகரிக்கிறது. இன்னொரு கருத்தாக, அந்த இடம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் ஏவப்படும் ராக்கெட்டுகள் பூமியின் சுழற்சியிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற முடியும் என்கின்றனர். மேலும் அது குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதி என்பதாலும் இந்தியாவின் விண்வெளி நிலையமாக ஸ்ரீஹரிகோட்டா தேர்ந்தெடுக்கப்பட்டது. 

5.இஸ்ரோ ஏன் நிலவின் தென் துருவத்தை ஆராய விரும்புகிறது? 

துவரை நிலவில் இறங்கிய அனைத்து விண்கலங்களும் அதன் பூமத்திய ரேகைக்கு அருகில் தரையிறங்கியுள்ளது. ஏனென்றால், அங்கிருக்கும் நிலப்பரப்பு நிலைமைகள் அனைத்தும் விண்கலத்தை சாப்ட் லேண்டிங் செய்ய உதவுகிறது. ஆனால் துருவப் பகுதிகளில் கடினமான நிலப்பரப்பு இருப்பதால் அங்கே பயணம் மேற்கொள்வது கஷ்டமாகும். மேலும் தென்துருவப் பகுதியின் குறைந்த வெப்பநிலை காரணமாக 'டைம் கேப்சூல்' போல செயல்படக் கூடியது. இதனால் அங்குள்ள விஷயங்கள் அதிக மாற்றத்திற்கு உட்பட்டிருக்காது. எனவே அந்த இடத்தில் இருக்கும் மாதிரிகளை சோதித்துப் பார்த்தால், நிலவைப் பற்றி துல்லியமாக அறிய முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியா தென் துருவத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறது. 

இது போன்ற பல முக்கிய அம்சங்கள் சந்திரயான் 3 திட்டத்தில் இருக்கின்றன. இந்த திட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து, நமது பாரத நாட்டிற்கு உலக அரங்கில் மகுடம் சூட்டும் என நாம் நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com