பல்லாயிரம் கோடி கடனை வைத்துக் கொண்டு பந்தா காட்ட நினைக்கும் பாகிஸ்தான்!

பல்லாயிரம் கோடி கடனை வைத்துக் கொண்டு பந்தா காட்ட நினைக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது நாம் அனைவருக்குமே தெரியும். அதை சரி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், அவர்களின் சுதந்திர தினத்திற்கு இந்தியாவுடன் போட்டி போட்டு பந்தா காட்ட நினைக்கிறது பாகிஸ்தான். 

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவது கோலாகலமாக நடக்கும். கொடியேற்று நிகழ்வு இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக அரங்கேற்றப்படும். 

தற்போது இந்தியாவுக்குப் போட்டியாக நமது அண்டை நாடான பாகிஸ்தானும் சுதந்திர தினத்தை இந்தியர்களை விட பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி மிக மோசமாக இருந்து வரும் பாகிஸ்தானில், பெட்ரோல் டீசல் கோதுமை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வதென்று பாகிஸ்தான் முயற்சிக்காமல், இந்தியாவுடன் போட்டி போடும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். 

இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் பிரிட்டிஷ் காரர்களின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில்,  பாகிஸ்தானில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. என்னதான் ஒரு நாளுக்கு முன்பு அவர்கள் சுதந்திர தினம் கொண்டாடினாலும், இந்தியாவின் கொண்டாடப்படும் அளவுக்கு பிரம்மாண்டமாக அவர்களின் கொண்டாட்டம் கவனம் பெற்றதில்லை. 

எனவே இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஓரளவாவது விமர்சையாக கொண்டாட பாகிஸ்தான் எண்ணுகிறது. இதனால் சுதந்திர தினத்தன்று 500 அடி தேசியக் கொடியை ஏற்ற அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லிபர்ட்டி சவுக்கில் ஏற்றப்படும். இந்த ஒரு கொடிக்காக 40 கோடி ரூபாயை பாகிஸ்தான் செலவழிக்க உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு அட்டாரி எல்லையில் 413 அடி உயர கொடியை இந்தியா ஏற்ற திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாக 500 அடி கொடியை ஏற்ற முடிவு செய்துள்ளனர். அதேசமயம் இரு நாடுகளுக்கு இடையே இந்த கொடிப் போர் முதல் முறையாக நடக்கவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு அட்டாரி வாகா எல்லையில் 360 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியை இந்தியா ஏற்றிய உடனையே, 400 அடி கொடியை நிறுவுவதற்கு பாகிஸ்தான் முடிவு செய்தது. 

மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இவர்களுக்கு இந்த வீணான போட்டி தேவையா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com