ராஜஸ்தானில் ஏழைகளுக்கு ரூ.500 விலையில் சிலிண்டர் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்!

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்

ராஜஸ்தானில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்.பி.ஜி.) விநியோகத்தை முதல்வர் அசோக் கெலோட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடங்கியது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில் இத்திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,000-த்துக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கெலோட் அரசு மானியவிலையில் அதாவது ரூ.500-க்கு சிலிண்டர்களை விநியோகிக்க தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரிக்கும் பெண்கள்கூட இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

சேமிப்பும் நிவாரணமும்தான் ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டின் குறிக்கோளாகும். ரூ.500-க்கு சிலிணடர் வழங்குவதன் மூலம் மக்களுக்கு நாங்கள் நிவாரணம் அளித்துள்ளோம் என்று இத்திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் அசோக் கெலோட் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஏழைக்கு ரூ.500 விலையில் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கெலோட் அறிவித்திருந்தார். சமீபத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.

ராஜஸ்தானில் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் இருந்து வந்தாலும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என காங்கிரஸ் கருதுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜ.க. மாறிமாறித்தான் ஆட்சியைப் பிடித்துள்ளன. இதுவரை ஆட்சியில் இருந்த எந்த கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் அசோக் கெலோட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் நீடித்து வருகிறது. முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்பது உள்பட மூன்று முக்கிய கோரிக்கைகளை பைலட் முன்வைத்துள்ளார். கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து கருத்துவேறுபாடுகளை மறந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்குமாறு கெலோட், பைலட் இருவரையும் கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் எதிர்க்கட்சியான பா.ஜ.க., அசோக் கெலோட் அரசின் மானியவிலை சிலிண்டர் திட்டத்தை விமர்சித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்புதான் இன்றைய தேவை. அதைவிடுத்து சிலிண்டருக்கு மானியம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ரூ.640 மானியம் விலையில் 14 லட்சம் குடும்பங்களுக்கு சிலிண்டர் வழங்கினால் அரசுக்கு ரூ.60 கோடி செலவாகும். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 73 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினால் ரூ.1500 கோடி அரசுக்கு செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com