தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! அமைச்சர் செந்தில் பாலாஜி!

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
Published on

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் சென்னை உள்ளிட்ட 5 மண்டலங்களின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு நடப்பாண்டில் மூடப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பின் படி, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை கடைகளில், மார்ச் 31 2023 அன்றுள்ளவாறு 6,648 கடை மேற்பார்வையாளர்களும், 14,794 விற்பனையாளர்களும் மற்றும் 2,876 உதவி விற்பனையாளர்களும் என மொத்தம் 24 ஆயிரத்து 318 ஊழியர்களுக்கு, ஏப்ரல்1ம் தேதி முதல் கணக்கெடுக்கப்பட்டு தொகுப்பு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

மது அருந்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை மருந்துகளை தவறான வழிகளில் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நான்கு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ரகசிய தகவலாளர்களுக்கான வெகுமதி தொகை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், எரி சாராயம், போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும் காவல் ஆளுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கான ஊக்கத் தொகை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com