

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு இசட் பிளஸ் Z+, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது . ஏற்கனவே அவருக்கு ஒய் பிளஸ் Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சரானதால் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், பிரபலங்கள் போன்றோருக்கு “அபாய நிலை” அடிப்படையில் பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு வகைகளை தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பாகும்.
இந்த பாதுகாப்பு வகைகளில் SPG, Z+, Z, Y+, Y, X என்ற நிலைகள் இருப்பது சிறப்பு.
இவற்றில் SPG எனும் சிறப்பு பாதுகாப்பு குழு என்பது இந்தியாவின் மிக உயர்ந்த பாதுகாப்பு படைகளில் ஒன்று. உயிர் மீதான அச்சுறுத்தல் வெகுவாக உள்ள இந்திய பிரதமருக்கு மிகக் கடுமையான பாதுகாப்பு வழங்குவது இந்த குழுவே. மேலும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, தேவைக்கேற்ப பாதுகாப்பு அளிப்பதும் இதன் பணியாகும்..
தற்போது SPG பாதுகாப்பு பொதுவாக இந்திய பிரதமருக்கே வழங்கப்படுகிறது.மற்ற முக்கிய தலைவர்களுக்கு Z+, Z, Y+, Y போன்ற பாதுகாப்பு பிரிவுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சருக்கு
Z+ (இசட் பிளஸ்) பாதுகாப்பு என்பது இந்தியாவில் மிகவும் உயர்ந்த விஐபிகளுக்கான பாதுகாப்பு வகைகளில் ஒன்று.
மிகவும் அதிக உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் இது முக்கியமானது.10க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் அடங்கிய சுமார் 55 பாதுகாப்பு பணியாளர்கள், 24 மணி நேர பாதுகாப்பு, துப்பாக்கி குண்டுகள் தாக்காத புல்லட் ஃபுரூப் வாகனங்கள், எஸ்கார்ட் வாகனங்கள் மற்றும் நவீன ஆயுதங்கள் மற்றும் தொடர்பு சாதனங்களுடன்
பயணம் போன்ற பாதுகாப்பு கவசங்களுடன் இனி வீடு, பொதுக்கூட்டம் என எல்லா இடங்களிலும் பயனாளருடன் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சித் தலைவராக வலம் வந்த விஜய்க்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒய் பிளஸ் என்பது நடுத்தரத்திற்கு மேல் இருக்கும் பாதுகாப்பு நிலையாகும். இதில் 2 முதல் 4 கமாண்டோக்கள் அடங்கிய சுமார் 11 பாதுகாப்பு பணியாளர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் , பாதுகாப்பு வாகனங்கள் ஆகியவை அடங்கும்.இந்த பாதுகாப்பு மத்திய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் நீதிபதிகள், அச்சுறுத்தல் உள்ள பிரபலங்கள் மற்றும் தீவிரமான சில சமூக செயற்பாட்டாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும்.
தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவருக்கு அபாயம் இருப்பதாக தெரிந்தால் மாநில நுண்ணறிவு பிரிவு ஆய்வு செய்த பிறகு, இந்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளவை நிர்ணயிக்கும். அதன் படியே தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.