டொனால்ட் ட்ரம்புக்கு 55 ஆண்டுகள் சிறை?

டொனால்ட் ட்ரம்புக்கு 55 ஆண்டுகள் சிறை?

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சி செய்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரான இந்த வழக்கில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 55 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

டிரம்ப் மீது ஏற்கனவே இரண்டு கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று, 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற இவர் சதி செய்ததாகக் கூறி கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில் 5 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாக, அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாக உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், மற்றொரு 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாக ஒரு அதிகாரியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளைத் தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியல் அமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயல்வதைத் தடுக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்குக் கிடைத்த வாக்குகளை தனக்கு மாற்றிக்கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க சதி திட்டம் தீட்டியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக அவர் நேற்று வாஷிங்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் ஆஜரானர். அப்போது தனது குற்றச்சாட்டுகளை மறுத்த டொனால்ட் டிரம்ப் 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு தான் செல்வதைத் தடுக்க, சிறப்பு வழக்கறிஞர் ஜேக் ஸ்மித் தீய எண்ணத்துடன் இதுபோன்று பொய் வழக்கு போட்டு சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்ற வழக்குகளில் ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். ஒருவேளை அவர் தேர்தலில் வென்றால் அதிபராக பதவி ஏற்கவும் அமெரிக்க அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com