
ஒருவர் இறந்த பின், இறுதி சடங்கிற்கு வரும் உடல்களை போலி நன்கொடையாளர் படிவத்தை பயன்படுத்தி அதை திருடி விற்று வந்துள்ளனர் அந்த அமைப்பின் உரிமையாளர் மேகன் ஹெஸ் மற்றும் அவரது தாய் ஷெர்லி கோச்.
அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் ஹெஸ் (46) என்பவர், கொலராடோவின் மாண்ட்ரோஸில், சன்செட் மேசா இறுதிச் சடங்கு இல்லத்தின் உரிமையாளராக இருந்துவந்தார். அங்கேயே 69 வயதான அவரது தாயார் ஷெர்லி கோச்சும் பணியாற்றி வந்துள்ளார். மேகன் ஹெஸ் இதனுடன் டோனர் சர்வீசஸ் என்ற உடல் உறுப்பு தான மையத்தையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், மகளும், தாயும் சேர்ந்து இறுதி சடங்கிற்கு வரும் உடல்களை யாருக்கும் தெரியாமல், போலி நன்கொடையாளர் படிவங்களை பயன்படுத்தி, அந்த உடல்களை திருடி வெளியே விற்று வந்துள்ளனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை சிறுநீரகம் மற்றும் தசைநாண்கள் போன்ற உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பது சட்டவிரோதமான செயலாக பார்க்கப்படும் நிலையில், அவை தானமாக வழங்கப்படலாம். அதேசமயம் ஆராய்ச்சி சம்பந்தமாகவோ, கல்வி பயன்பாட்டிற்காககோ உடல்கள் தேவைப்படும் பட்சத்தில், தலைகள், கைகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற உடல் பாகங்களை விற்பது கூட்டாட்சி சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. இதனால் மேகன் ஹெஸ் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி, இந்த உடல் பாக விற்பனையை செய்துள்ளதோடு, போலி நன்கொடையாளர் ஆவணங்களை பயன்படுத்தி உடல் உறுப்புகளை திருட்டுத்தனமாக விற்றுள்ளார். இதற்கு உடந்தையான தாய் ஷெர்லி கோச்-ன் வேலை உடல் பாகங்களை வெட்டுவதாக இருந்தது.
ஐநூறுக்கும் அதிகமான உடல் திருட்டு சம்பவம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவந்தும் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
2016-2018 ராய்ட்டர்ஸ் புலனாய்வுத் தொடரால் இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தபின்னர்தான், மேகன் ஹெஸ்ஸிடம் இருந்து பெறப்பட்ட கால்கள், கைகள் என பெறப்பட்ட உடற்பகுதிகள் எல்லாம் மோசடி மூலமாகப் பெறப்பட்டுள்ளன என்று அதை வாங்கிய அறுவை சிகிச்சை பயிற்சி நிறுவனங்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதன் பேரில் முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. அதன்பின்னர், இருவரும் ஜூலை மாதம் இந்த மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
அதன்பின்னர் மேகன் ஹெஸ்ஸுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், உடந்தையாக இருந்த அவரது தாயார் ஷெர்லி கோச்சுக்கு 15 ஆண்டுகாலமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.