5ஜி - ஒரு லட்சம் டவர் ரெடி; ஏர்டெல்லை விட எட்டடி பாய்ச்சலில் ஜியோ!

5ஜி - ஒரு லட்சம் டவர் ரெடி; ஏர்டெல்லை விட எட்டடி பாய்ச்சலில் ஜியோ!
Published on

ரிலையன்ஸ் ஜியோ, 5ஜி யுகத்தில் களமாடுவதற்கு பெரிய அளவில் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக, செல்போன் டவரை அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் 5ஜி தொழில் நுட்பத்தை பரவலாக்கிட, புதிதாக ஒரு லட்சம் டெலிகாம் டவர்களை நிறுவியிருக்கிறது.

அல்ட்ரா வேகத்துடன் இணைய இணைப்பை உறுதிப்படுத்துவதுதான் 5 ஜி தொழில்நுட்பத்தின் முக்கியமான அம்சம். இதற்கு தற்போதுள்ள டெலிகாம் டவர் போதாது. புதிய டவர்களை அமைக்கவேண்டும். அதற்கு ஏராளமான கோடிகள் முதலீடு செய்தாக வேண்டும். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் மட்டுமே பெரிய தொகையை முதலீடு செய்ய முடியும்.

தேசிய அளவில் டெலிகாம் துறை சார்ந்த விபரங்களை பதிவு செய்யும் இணையத்தளத்தில் ஜியோ நிறுவனத்தின் சார்பாக 99,987 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது பி.டி.எஸ் என்னும் பேஸ் ட்ரான்சீவர் ஸ்டேஷன் இருவேறு அலைவரிசைகளில் தயாராகியிருக்கிறது. ஏர்டெல் நிறுவனமோ நாடு முழுவதும் 22,219 பி.டி.எஸ் டவர் நிறுவப்பட்டுள்ளன.

அதாவது எர்டெல்லை விட ஜியோ ஏறக்குறைய ஐந்து மடங்கு டவர்களை அமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி பணிகளை நிறைவு செய்யும் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

5ஜி தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஜியோவை இனி தவிர்க்க முடியாது. ஜியோவை எதிர்த்து, சிறிய நிறுவனங்களால் போட்டியிட முடியாத நிலையை 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கிவிடும் என்று தொலைத் தொடர்புத்துறையை கூர்ந்து கவனிக்கும் விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.

‘இந்திய தொலைத் தொடர்புத்துறை, இனி மெல்ல ஏகாதிபத்தியமாகும். இனி சிறிய நிறுவனங்களால் தாக்குப்பிடிக்கமுடியாது. தொலைத் தொடர்புத்துறை சிலரது கையில் சிக்கி, சின்னபின்னமாக்கப்பட்டு வருகிறது’ என்று ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ரிலையன்ஸ் கம்ப்யூனிகேஷன் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி பேசியிருந்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உருவாக்கிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் இருக்குமிடம் தெரியாமல் காணாமல் போனது. 46 ஆயிரம் கோடி கடனில் சிக்கியிருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை மீட்க முடியாமல் தனது உடன்பிறந்த அண்ணன் முகேஷ் அம்பானியிடம் சரணடைந்தார், அனில் அம்பானி.

தொலைத் தொடர்பு சாதனங்களை வாங்குவதிலும், அதை சரியான இடத்தில் நிறுவி, நிர்வகிப்பதில் ஏகப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை சார்ந்துதான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் இருக்க வேண்டியிருந்தது.

அடுத்தடுத்த சிக்கல்களால் தொலைத் தொடர்புத்துறை மீதான ஆர்வம் கரைந்து போனது. தன்னுடைய அண்ணனிடம் கடன் தொகையைப் பெற்று, நிலுவையில் உள்ள கடன்களையெல்லாம் அடைத்து ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தொலை தொடர்புத் துறையை விட்டே விலகுவதாகவும் அறிவித்தார். 5ஜி தொழில்நுட்பம் முழுமையாக அமலுக்கு வருவதற்குள் இன்னும் எத்தனை சிறிய நிறுவனங்கள் காணாமல் போகப்போகிறதோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com