மக்களே உஷார்..! சென்னையில் பரவும் பறவை காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!

bird flu
bird flusource:india tv news
Published on

சென்னை அடையாறு மற்றும் இந்திரா நகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காகங்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்து விழுந்தது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் 18 காகங்கள் வரை உயிரிழந்த நிலையில், இது ஏதேனும் விஷத்தன்மை கொண்ட உணவை உண்டதால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட சோதனையில் விஷத்தன்மை இல்லை என்பதும், மாறாக காகங்களின் மண்ணீரல் வீக்கம் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உயிரிழந்த காகங்களின் மாதிரிகள் போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NIHSAD) மேலாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள அந்த ஆய்வு முடிவுகளில், காகங்கள் 'ஹெச் 5.என்1 ஏவியன் இன்ப்ளூயன்ஸா' (H5N1 Avian Influenza) எனப்படும் அதிதீவிரப் பறவைக் காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு தொற்று என்பதால், தமிழக அரசுக்கு மத்திய ஆராய்ச்சி நிறுவனம் அவசர எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு காகங்கள் மட்டுமின்றி கோழிகள், வாத்துகள் மற்றும் இதர பறவை இனங்களுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோழிப் பண்ணைகளில் அசாதாரணமான முறையில் பறவைகள் இறந்தால் உடனடியாக விலங்குகள் பராமரிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், காப்புக் காடுகள் மற்றும் சரணாலயங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, மர்மமான முறையில் பறவைகள் இறக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான முக்கிய எச்சரிக்கையாக, இறந்த பறவைகளை வெறும் கைகளால் தொடுவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். காய்ச்சல், இருமல், தசைப்பிடிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இந்தப் பறவைக் காய்ச்சலின் அறிகுறிகளாகும். பறவைகளின் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால், அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்பு தென்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

இறந்த பறவைகளை அப்புறப்படுத்தும்போது குறைந்தபட்சம் 8 முதல் 10 அடி ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைத் துறை ஊழியர்கள் களத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்றும், முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆய்வகங்களுக்கு மட்டுமே மாதிரிகளை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து சென்னை மற்றும் திருவள்ளூரிலும் காகங்கள் பலியாவதால், வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! Hi… நான் WhatsApp Support பேசுறேனு மெசேஜ் வந்தா நம்பாதீங்க..!!
bird flu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com