7 இந்தியரை மறைத்து பிரிட்டனுக்கு கடத்திய இருவர்: 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

7 இந்தியரை மறைத்து பிரிட்டனுக்கு கடத்திய இருவர்: 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Published on

ட்டவிரோதமாக ஏழு இந்தியரை கார் டிக்கியில் வைத்து மறைத்து பிரிட்டனுக்குள் கொண்டுசென்ற இரண்டு பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்பட்ட இருவருமே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.

சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 48 வயது பல்விந்தர் சிங் புல், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவிய குற்றத்துக்காக மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட 45 வயதான ஹர்ஜித் சிங் தாலிவால் என்பவருக்கு மூன்று ஆண்டுகள், இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தென் கிழக்குப் பகுதியான கேண்டர்பரி கிரௌன் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இருவருமே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டனில் சட்டவிரோதமாகக் குடியேற உதவி புரிந்ததாக ஒப்புக்கொண்டனர்.

பிரிட்டனின் உள்துறை தகவலின்படி, 2018 ஜூலை மாதத்தில் டோவரில் உள்ள ஐக்கிய இராச்சிய எல்லையில் புல் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருடைய கார் டிக்கியில் மூன்று இந்தியர்களை ஆப்கானிஸ்தான் சீக்கியர்களெனக் கூறி, மறைத்து வைக்கப்பட்டு இருந்தனர். நான்கு நாள்களுக்குப் பிறகு புல் கைது செய்யப்பட்டார்.

இதைப்போலவே, தாலிவாலும் அதே எல்லைப் பகுதியில் நான்கு இந்தியரை தன் கார் டிக்கியில் வைத்து, ஒளித்துவைத்தபடி பிரிட்டனுக்குள் கூட்டிச் செல்ல முயன்றபோது பிடிபட்டார். அவரும் அவர்களை ஆப்கானிய சீக்கியர்களென பொய்யாகக் கூறினார். இவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு உரியபடி இருந்ததால், பிரிட்டனின் ஐக்கிய இராச்சிய உள்துறை குற்றவியல்- நிதியியல் புலனாய்வுக் குழு விசாரணையில் ஈடுபட்டது.

அந்த விசாரணையில் இருவரின் செல்போன் பதிவுகளில் அகப்பட்ட விவரங்கள், குற்றத்தை நிரூபிக்கும்படியாக இருந்ததால், காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டது.

பிரிட்டன் உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் குடியேறுவது அந்த நாடுகளில் பெரும் உள்நாட்டுப் பிரச்னையாக மாறியுள்ளது. போர், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் அடைக்கலம் கோரும் அகதிகளுக்கு பல நலவாழ்வு உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவருகின்றன. இதனால் அந்த நாடுகளில் அடைக்கலம் புகுவதை இலக்காக வைத்து, ஆபத்தான கடல்வழிப் பயணங்களிலும் பல்வேறு நாட்டு மக்கள் ஈடுபடுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com