
இலங்கை CITRUS – வாஸ்கதுவாவில் நடைபெற்ற 16வது மாபெரும் ஆசிய சதுரங்க போட்டியில் 7 வயதான ஷர்வானிகா இந்தியா சார்பில் கலந்து கொண்டு 3 பிரிவுகளில் நடைபெற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்று, 3 தங்கப் பதக்கங்களை வென்ற நிலையில் அவருக்கு அரியலூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து உலக சதுரங்க போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் அன்புராஜாவின் 2வது மகள் ஷர்வானிகா. இவர் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சதுரங்க போட்டியில் தேசிய அளவில் பல பரிசுகளை வென்றுள்ள ஷர்வானிகா, இலங்கையில் தற்போது நடைபெற்ற ஆசிய சதுரங்கப் போட்டியிலும் கலந்துகொண்டார். அதில் 3 பிரிவுகளில் மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற்றன. அனைத்திலும் வெற்றிகளைப் பெற்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். இது தவிர அணிக்கான பதக்கங்கள் 3 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.
ஆசிய சதுரங்க போட்டியில் புது சாதனை படைத்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள 7 வயதான ஷர்வானிகா சென்னையில் இருந்து அரியலூருக்கு இரயிலில் வந்து இறங்கியதும் அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையினர், பொதுமக்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தற்போது நடந்து முடிந்துள்ள ஆசிய சதுரங்க போட்டியில் ஷர்வானிகா வெற்றி பெற்றதையடுத்து, உலக சதுரங்க போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.