
பாகிஸ்தானில் இன்ஜினியரிங் படித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு அறிக்கை மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த கேலட் பாகிஸ்தான் மற்றும் பிரைட் ஆகிய நிறுவனங்கள் பாகிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி பெண்களின் நிலை குறித்த தரவுகளை வெளியிட்டு இருக்கிறது. இதில், பாகிஸ்தானில் பெண்கள் கல்வி அறிவு சதவீதம் சற்று உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் படித்து முடித்து வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் என்பது பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் வேலைக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லாத பெண்கள், மற்ற செயல்பாடுகளை முன்னெடுக்கும் பெண்கள் என்று மூன்றாகப் பிரித்து தரவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் 2020 - 21 ஆம் ஆண்டில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பெண்கள் 28, 920 என்றும், இவர்களில் 50.9 சதவீதம் பெண்களுக்கு வேலை செல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. 20.9 சதவீதம் பெண்களுக்கு வேலை கிடைக்காத சூழல் நிலவுகிறது. 28 சதவீதம் பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர்.
பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் 28.1சதவீதம் பெண்கள் எழுத்தறிவு பெற்றிருக்கின்றனர், பாகிஸ்தானின் மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 78. 9 சதவீதம் பெண்கள் பட்டப்படிப்பு பெற்றுள்ளனர். மேலும் 25 வயது முதல் 34 வயது உடைய பட்டம் பெற்ற பெண்கள் 50.9 சதவீதம் என்ற நிலையில் இருக்கின்றனர். 35 வயது முதல் 44 வயது வரை உள்ள பட்டம் பெற்ற பெண்களுடைய நிலை 21.7 சதவீதமாக இருக்கிறது.
பாகிஸ்தானில் பெண்களுடைய கல்வி முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய அதே நேரத்தில் தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களுடைய எண்ணிக்கையை மேம்படுத்தினால் பெண்களுடைய பொருளாதார நிலை உயர்வடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.