தமிழகம் முழுவதும் விரைவில் 700 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1000 டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இது குறித்து பேசியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று இருந்து வரும் வேலையில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக இறப்பு என்பது இல்லை. தமிழகத்தில் 96% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இறப்பு இல்லை.
பி.எப்-7 கொரானா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருவதை அடுத்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இருந்து தமிழகத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் நாளை முதல் ரேண்டம் முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தமிழகம் முழுவதும் விரைவில் 700 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஒரு டாக்டர் நியமிக்கப்பட உள்ளார். மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்ததும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1000 டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்தார்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிவதற்குரிய கருவிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. விரைவில் இந்த பிரிவு செயல்பட துவங்கும். உக்ரைனில் உள்ள பிரச்சினை காரணமாக தமிழக மருத்துவ மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலை குறித்து மத்திய அரசிடம் எடுத்து கூறப்பட்டது. அதே மருத்துவ பாடத்திட்டம் உள்ள வேறு நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்த மாணவ மாணவிகளை சேர்க்க ஆலோசனை மேற்கொற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.