தில்லி யூனியன் பிரதேசத்தின் 2023-24 ஆம் ஆண்டுக்கான ரூ.78000 கோடியிலான பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
தில்லி நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டாகும் இது. கடந்த ஆண்டு (2022-23) ரூ.69,000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த முறை ரூ.78,000 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா தமது பதவியை ராஜிநாமாச் செய்ததை அடுத்து கைலாஷ் கெலோட் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை தில்லி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்காததால் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குழப்பமாகவே இருந்த்து.
பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில விளக்கங்களை கேட்டிருந்தது. ஆம் ஆத்மி அரசு விளக்கம் அளித்த பின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தில்லியை சுத்தமாகவும் அழகுடையதாகவும் நவீன வசதிகளுடனும் வைத்திருக்கும் நோக்கத்தில் இதற்கான திட்டத்துக்கு ஆம் ஆத்மி அரசு ரூ.19,466 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,400 கி.மீ. தொலைவுள்ள தில்லி சாலைகள் அடுத்த 10 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும். இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,034 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் 26 புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். இவற்றில் 10 மேம்பாலங்கள் கட்டப்படும் நிலையில் உள்ளன. இது தவிர புதிதாக 11 மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் கேட்டு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று கெலோட் தெரிவித்தார்.
தில்லியில் உலகத்தரத்தில் மூன்று இடங்களில் மாநிலங்களுக்கு இடையிலான பஸ்நிலையங்கள் அமைக்கப்படும் 1600 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும். போக்குவரத்துத் துறைக்கு ரூ.9,333 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யமுனையை தூய்மைப்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தில்லியில் 3 குப்பை கொட்டும் இடங்கள் உள்ளன. இவை இரண்டு ஆண்டுகளில் அப்புறப்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2023-24 ஆம் ஆண்டில் நிதியுதவியாக ரூ.8,241 கோடி வழங்கப்படும்.
சுகாதார திட்டங்களுக்காக தில்லி பட்ஜெட்டில் ரூ.9,742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 புதிய மருத்துவமனைகள் ஏற்கெனவே கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் 4 இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றார் அமைச்சர் கெலோட்.
தில்லியில் மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில 450 வகையான பரிசோதனைகள் இலவசமாக
செய்யப்பட்டு வருகின்றன. மெட்ரோ நிலையங்களில் புதிதாக மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக ரூ.16,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.200 கோடி அதிகமாகும்.
ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் 20 கணினி வீதம் 350 அரசு பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும். ஆசிரியர்கள், முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் கைலாஷ் கெலோட் கூறினார்.