சென்னை கடற்கரையின் கல்லறைகள் ஆக்ரமித்துள்ள 8 ஏக்கர் நிலத்தை மீட்கவேண்டும் - சீமான் அதிரடி!

சென்னை கடற்கரையின் கல்லறைகள் ஆக்ரமித்துள்ள 8 ஏக்கர் நிலத்தை மீட்கவேண்டும் - சீமான் அதிரடி!

அனைத்து வரிகளையும் முறையாக கட்டினாலும், ஆக்ரமிப்பு செய்திருப்பதாக அப்பாவி மக்களை வெளியேற்றும் அரசு, கடலுக்கு நடுவே பேனா சிலை வைப்பது, கடற்கரையில் கல்லறை என்னும் பெயரில் 8 ஏக்கர் நிலத்தை ஆக்ரமிப்பு செய்வதெல்லாம் நியாயமா என்று நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தேனி, போடி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ள சீமான், உள்ளூர் பிரச்னைகளுக்கு குரல் எழுப்பியிருக்கிறார். சமீபத்தில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி முதல் அட்டணம்பட்டி வரையிலான நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள ஆக்ரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. ஏறக்குறைய 2 கி.மீ தூரம் வரை இருந்த கடைகள் அனைத்தும் ஒரே நாளில் அகற்றப்பட்டன.

60 ஆண்டுகளாக அனைத்து வரிகளையும் முறையாக கட்டி, அரசின் அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், ஆக்ரமிப்பு செய்வதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஆக்கிரமிப்பு என்றால், சென்னை மெரீனா கடலில் 130 அடிக்கு பேனா சிலை வைப்பது ஆக்கிரமிப்பு இல்லையா, அதே கடற்கரையில் கல்லறை என்ற பெயரில் 8 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதையும் அகற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, காய்கறி தட்டுப்பாடு தொடர்கின்றன. ஒரு குடம் தண்ணீர், 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. நல்ல குடிநீரை மக்களுக்கு வழங்க அரசு தவறிவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் விடியல் அரசே, முடியலை அரசே என்று மக்கள் கேட்கும் நிலைதான் ஏற்படும் என்று பேசியவர், மத்திய, மாநில கட்சிகள் செய்யும் அரசியலையும் கையிலெடுத்துக்கொண்டார்.

மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் ஆண்ட, ஆளுகிற தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. தமிழக காவல்துறை உள்ளிட்ட உயர் பதவிகளில் எந்தவொரு தமிழரும் இல்லை. காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதற்கு கூட யோசிக்கிறார்கள். அவர்களோடு கூட்டணியில் இடம்பெற்றிருப்பதுதான் காரணம்.

மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. டாஸ்மாக்கை திறந்து வைத்து தமிழ்நாட்டு இளைஞர்களை குடிக்க வைக்கும் தமிழக அரசின் அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகமெல்லாம் தேவையற்ற விஷயம் என்றும் பேசியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com