80 சதவிகித பாலுறவு சிக்கல்களுக்கு மருந்துகள் இன்றி தீர்வு காண முடியும்: பாலியல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

80 சதவிகித பாலுறவு சிக்கல்களுக்கு மருந்துகள் இன்றி தீர்வு காண முடியும்: பாலியல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Published on

வ்வளவுதான் அறிவியலும் நாகரிகமும் முன்னேறி னாலும் இன்றும் பாலியல் கல்வி என்றாலே விலக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என்ற கருத்து நிலவுகிறது. இந்தச் சூழலில் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்தப் பாலியல் கல்வி தேவையில்லை  என்ற தடையை உடைத்து கல்லூரி மாணவ மாணவிகள் பாலியல் கல்வி நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழக கல்லூரியில் பாலியல் கல்வி தொடர்பான நிகழ்ச்சிக்கு அந்தக் கல்லூரியில் என் எஸ் எஸ் அமைப்பு விவோக்ஸ் எனும் பாலியல் சுகாதார தளம், பாலியல் கல்வியாளர்கள், ஆலோசகர்கள், சிகிச்சையாளர்கள், அமெரிக்க சங்கம், ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தனர். கேரளா ஹைகோர்ட் சமீபத்தில் ஒரு பெண்ணை அவரது வெளிப்படையான அனுமதியின்றி இளைஞர்கள் தொடக்கூடாது என்ற கருத்து தெரிவித்த நிலையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 28ந் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 100 மாணவ மாணவிகளை கலந்து கொண்டனர். மாணவர்களை விட  மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆபாச படம் முதல் வாழ்வியலில் பாலியல் வரையில் பாலியல் தொடர்பான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒரு மாணவரின் கேள்விக்கு பாலியல் கல்வி பயிற்சியாளர் சங்கீத் சபாஸ்டியன் பதிலளிக்கையில் “உங்களிடம் சரியான தகவல்கள் இருக்குமானால் 80 சதவிகித பாலுறவு சிக்கல்கள் மருந்துகளோ, மருத்துவ ஆலோச னைகளோ, இன்றியும் தீர்வு காண முடியும்“ என குறிப்பிட்டார். 

இறுதி ஆண்டு பட்டப் படிப்பு அரசியல் அறிவியல் மாணவி ஒருவர் “இந்த அமர்வு பாலியல் ரீதியான மாயைகளை தவறாக புரிந்து  கொள்ளுதல்களை தவிர்த்து தெளிவு படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது” என தெரிவித்தார். மேலும் “பாலியல் என்பது அசிங்கமான வார்த்தை அல்ல அது ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் அங்கம்தான்” எனவும் குறிப்பிட்டார்.

மற்றொரு மாணவி கூறுகையில் “நான் என் பள்ளியில் ஒருபோதும் பாலியல் கல்வியை பெற்றதில்லை. இன்று நான் பாலியல் தொடர்பாக வெட்கப்பட ஏதுமில்லை என்று கற்றுக் கொண்டேன். இது பொறுப்புடன் மதிப்புடன் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று” என்று குறிப்பிட்டார்.

விலங்கியல் துறை பேராசிரியை என் எஸ் எஸ் திட்ட அதிகாரியுமான ஷீபா என்பவர்,   “இணையதளங்களில் உலா வருகிற ஆபாசம், பெரும்பாலான இளைஞர்களுக்கு உண்மையான பாலியல் கல்வியாக மாறி இருக்கிறது. ஆனால் ஆபாசத்தின் மூலம் கிடைக்கும் பாலியல் கல்வி தவறான தகவல்களைத் தரும். அதனால்தான் இளைய தலைமுறையினருக்கு மருத்துவ ரீதியிலான துல்லியமான பாலியல் கல்வி வழங்குவது முக்கியமாக அமைந்துள்ளது” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு அமர்வு பாலுறவில் உடலுக்கும், உணவிற்கும், உடல் தகுதிக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டியது. உணவு விடுதி ஒன்றின் அதிபர் இந்த பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நொறுக்குத் தீனி  எப்படி பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை எடுத்துக் கூறினார்.

கட்டற்ற இணையதள சேவைகளினால் இளைஞர்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் காலகட்டம் இது. பெற்றோரும், மற்றோரும் கற்பிக்கத் தயங்கும் பாலியல் வகுப்புகளை இம்மாதிரி கல்லூரியில் பாலியல் கல்வி நிகழ்ச்சியாக  நடத்தும்போது தவறான பாதைக்குச் செல்லாமல் பாலியல் குறித்த தெளிவை மாணவர்கள் பெறுவார்கள் என்பது நிச்சயம். தமிழ்நாட்டிலும் இது போன்ற சந்தேககங்களுக்குத் தீர்வு தரும் கல்வி நிகழ்ச்சிகளை நடத்தினால் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com