81 கோடி இந்தியர்களின் ஆதார் விவரங்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் முக்கிய அடையாள ஆவணமாக விளங்குவது ஆதார் கார்டு. வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து, அரசின் சலுகைகளை பெறுவது வரை அத்தனைக்கும் ஆதார் கட்டாயமாகிவிட்டது. இவ்வளவு முக்கியமான தனி நபர்களின் ஆதார் விவரங்கள் திருடப்பட்டு, டார்க் வெப் மூலம் விற்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம் தெரிவித்த அறிக்கையின்படி, டார்க் வெப்பில் 81 கோடியே 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வெறும் 66 லட்சம் ரூபாய்தான். அதாவது, இந்தியர் ஒருவரின் தனிப்பட்ட ஆதார் மற்றும் பாஸ்போர்ட் விவரத்தின் விலை வெறும் ஒரு பைசாவை விடவும் மிகக் குறைவு. இந்தியர்களின் பெயர்கள், வயது, தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட பதிவுகளை விற்பதாக, "pwn0001" என்ற பெயரில் இயங்கும் நபர் BreachForums என்ற டார்க்நெட் கிரைம் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவரங்கள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையக் கோப்புகளில் இருந்து திருடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதேபோல் இந்திய உள்சட்ட அமலாக்க அமைப்பு தொடர்பான 1.8 டெராபைட் தரவுகளை விற்பனை செய்வதாக BreachForums இணையதளத்தில் லூசியஸ் என்று அழைக்கப்படும் ஹேக்கர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.. எனவே, நவீன தொழில்நுட்ப உலகில் தனிப்பட்ட நபர்களின் தரவுகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என சைபர் க்ரைம் தடுப்பு வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.