சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் சம்பள விவரங்கள் லீக் செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்நிறுவன சிஇஓ சத்திய நாதெல்லாவின் நிகர சொத்து மதிப்பு 8,200 கோடி எனத் தகவல்கள் வெளிவந்ததை அறிந்த இணையவாசிகள், அவர்களின் கருத்துக்களை நகைப்புக்குரிய வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சத்திய நாதெல்லா இருந்து வருகிறார். இவர் சிஇஓ-வாக பொறுப்பேற்று பத்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவரது ஊதியம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியானது. அவரது சொத்து மதிப்பை பார்க்கும் எந்த ஒரு சராசரி நபருக்கும் நிச்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதாவது நிறுவனம் இவருக்கு வழங்கும் சம்பளம், போனஸ் மற்றும் ஷேர் என மொத்தமாக அவருக்கு இதுவரை ஒரு பில்லியன் டாலர் வரை கிடைத்துள்ளதாம். ஒரு பில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 8,200 கோடியாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது அதிகமாக Ai துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவர்களின் பெருவாரியான முதலீடுகள் Ai துறை சார்ந்த விஷயங்களிலேயே இருக்கிறது. இது எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் திட்டம் என்பதால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தைத் தொட்டுவருகிறது. இதன் காரணமாகவே சத்ய நாதெல்லாவின் ஊதியமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்த செய்தியை ப்ளூம்பெர்க் என்ற செய்தி நிறுவனம் துல்லியமாக விளக்கியுள்ளது. அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நிர்ணயிக்கப்பட்ட பிறகு ஏகப்பட்ட போனஸ்கள் கிடைத்து, அதன் மதிப்பு தற்போது கோடிகளில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே அவருக்கு 20 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிறுவன பங்குகள் பரிசாகக் கிடைத்திருக்கிறது. அவருக்கு இதை யார் வழங்கினார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், சத்திய நாதெல்லாவுக்கு ஒரு பில்லியன் டாலருக்கு நிகரான சொத்து மதிப்பு இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நாதெல்லாவின் உண்மையான சொத்து மதிப்பை வெளிவிடவும் மறுத்துவிட்டார்.
இவருடைய பல்லாயிரம் கோடி சொத்து மதிப்பை அறிந்த பலரும், இதுகுறித்து பலதரப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவர் பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இன்று வரை காப்பாற்றி வருகிறார் என்பதால், இவ்வளவு சம்பளம் பெறுவது ஆச்சரியமில்லை எனக் கூறப்படுகிறது.