ஆமாங்க! ஏழைகளும் எளிதாக வாங்கும் விதமாக வந்துள்ளது 9 காரட் தங்கம்! வாங்க பார்க்கலாம்!
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது!அதைப் போலவேதான் வெள்ளியும்! 1960களில் ஒரு பவுன் (8 கிராம்) இந்திய ரூபாயில் 100/- க்கும், 1980 களில் ஒரு கிராம் வெள்ளி 6, 7 ரூபாய்க்குந்தான் விற்றதாக, விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய விலையோ தங்கம் ஒரு கிராம் 9620/-என்றும் வெள்ளியின் விலை கிராமுக்கு 134/-என்றும் உள்ளது.
நமது நாட்டில்தான் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்யப்படுவதாகவும், அதன் காரணமாகவே உலகப் பொருளாதாரம் மிகுந்த சீர்கேடு அடைந்தபோதும் நாம் அதிகம் பாதிக்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.
நமது பெண்டிர், ஏன் ஆண்களுந்தான்! தங்க நகைகள் அணிந்து கொள்வதில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாகவே உள்ளார்கள். கல்யாண வீடு என்றாலே, பெண்களுக்கு உடனடித்தேவை பட்டும், பவுனுந்தான்! நெற்றிச் சுட்டியில் ஆரம்பித்து, காதுகள், மூக்கு, கழுத்து, இடுப்பு, கைகள், விரல்கள் என்று தொடர்ந்து, கால்களில் முடிப்பர் தங்கள் அணிகலன்களை! இப்பொழுது ஆண்களும் பெண்களின் வளையல்களைப் போலவே தங்கள் ரிஸ்ட்டுகளில் ப்ரேஸ்லெட்டும் கழுத்தில் காத்திரமான செயினும் அணிந்து கொள்கிறார்கள்.
கோல்ட் ஓர் உயர்தர அலங்காரப் பொருளாக இருப்பதோடு, ஆபத்து நேரங்களில் உதவும் ஆபத்சகாயனாகவும் இருப்பதாலேயே அதற்கு உயர்வான மதிப்பு, உலகத்தார் மத்தியில் உலவுகிறது. அமெரிக்க, ஐக்கிய நாடுகளில் பெரும்பாலும் அணிகலன்களாக இல்லாதிருந்த தங்கம், நமது நாட்டினரின் தாக்கத்தால், மெல்ல அந்நாட்டுப் பெண்களையும் கவர ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டு நடப்பு இவ்வாறிருக்க, நான்காயிரம், ஆறாயிரம் என்று மெல்ல முன்னேற ஆரம்பித்த தங்கத்தின் விலை, இதனை எழுதுகின்ற நேரத்தில், சவரன் ரூ 76960/- (9620x8)ஆக உச்சத்தைத் தொட்டு, நடுத்தரக் குடும்பத்தினரை நடுங்கச் செய்து வருகிறது.
தங்கத்தால் தனித்து இயங்க முடியாதென்பதையும், அது செம்பு மற்றும் இதர உலோகங்களுடன் கூட்டணி அமைத்தே அணிகலன்களாக மாறி, நம் மங்கையரின் அழகுக்கு அழகு சேர்க்கும் என்பதையும் நாம் அறிவோம். கூட்டணி அடிக்கடி மாறுவது இயல்புதானே!
அப்படித்தான் இப்பொழுது புதிய கூட்டணி ஆரம்பிக்கிறது. அந்தக் கூட்டணியின் பெயர்தான் 9 காரட் தங்கம்! ஏற்கெனவே 24, 22,18,14 என்று இருப்பதோடு இதுவும் இணைகிறது. இதன் நோக்கம் மிக உயர்வானது! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறி வரும் தங்கத்தை, அவர்களும் வாங்கி, அணிந்து மகிழ ஆவன செய்வதே இதன் முக்கியக் குறிக்கோள். என்ன செம்பின் கலவை இதில் அதிகமாக இருக்கும்! ஆனால் மின்னுவதற்குத் தவறாது! தரச்சான்றும் வழங்கப்படும்!
வசதியுள்ளவர்கள் 24 காரட் வாங்கட்டும். வசதி குறைவான, நம்மைப்போன்ற எளியவர்கள் அதிகமாக உள்ள நம் நாட்டில், இதன் பங்கும் பணியும் அதிகமாகவே இருக்கும். எனவே 9 காரட் தங்கத்தை வரவேற்போம். ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாததை ஒரு படம் எளிதாக விளக்கி விடும் என்பார்கள். விபரங்களைக் மேலுள்ள படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்களேன்!