அம்மா உணவகங்களை மேம்படுத்த 9 கோடி: சென்னை மாநகராட்சி முடிவு!

அம்மா உணவகங்களை மேம்படுத்த 9 கோடி: சென்னை மாநகராட்சி முடிவு!

ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு ஒதுக்கிய நிதியை விட இரண்டு மடங்கு அதிக நிதி ஒதுக்கி, சென்னை மாநகரம் முழுவதுமுள்ள அம்மா உணவகத்தை மேம்படுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டிருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா உணவகம், தேசிய அளவில் பிரபலமான திட்டம். தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து சென்னைக்கு வந்து சேரும் வடமாநில தொழிலாளர்களுக்கும் அம்மா உணவகமும் குறைவான விலையில் நிறைவான உணவை அளித்து வந்தது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த அன்றே அம்மா உணவகங்களை மூடப்போவதாக வந்த செய்திகளும், அதைத் தொடர்ந்து அகற்றப்பட்ட பேனர்களும் ஸ்டாலின் அரசுக்கு முதல் அவப்பெயரை வாங்கி தந்தன. அதையெடுத்து பேனர்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் அரசு, அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்கிற உறுதியை அளித்தது.

அம்மா உணவகங்களில் ஊழியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அடிப்படை வசதிகள் கூட பல அம்மா உணவகங்களில் இல்லையென்றும், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நல்ல முறையில் செயல்பட்டுக்கொண்டிருந்த அம்மா உணவகங்களை தி.மு.க அரசு முடக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும உள்ள அம்மா உணவங்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் 9 கோடி ரூபாயை ஒதுக்குவதாக சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் அறிவித்திருக்கிறார். சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீர் சோதனை சென்ற துணை மேயர், கடந்த ஓராண்டில் மட்டும் 5 கோடி பேர் உணவு உண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

பெரும்பாலான அம்மா உணவகங்களில் காலையில் இடம்பெறும் இட்லியும், மாலையில் இடம்பெறும் சப்பாத்தியும் பெரிய அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கின்றன. மதிய வேளையில் எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், கறிவேப்பிலை சாதம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இட்லி, சாதம் உள்ளிட்டவையின் தரம் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்னை மாநகரத்தில் உள்ள அம்மா உணவகங்களின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் 16 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், அரசு செலவு செய்யும் தொகையோ ஏறக்குறைய 98 கோடி ரூபாய் என்கிறார்கள். அம்மா உணவகங்களால் அரசுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.இலவச மகளிர் பேருந்து மூலமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அதனோடு

ஒப்பிட்டால், அம்மா உணவகம் மூலமாக அரசுக்கு ஏற்படும் நஷ்டம் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இது போன்று ஏழைகளின் பசி தீர்க்கும் திட்டத்தில் அரசு லாப, நஷ்ட கணக்குகளை பார்ப்பது சரியல்ல என்கிறார்கள், அதி.மு.கவினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com