
இளம் வயதில் கணவன் மனைவி அன்புடன் வாழ்க்கை நடத்துவது இயல்வு. ஆனால் வயதாலும் அந்த அன்பு அப்படியே நிலைத்திருக்குமா என்றால், அது அனைவராலும் முடியாது என்றே சொல்வார்கள். தற்போதுள்ள பரபரப்பான வாழ்க்கை முறையில் அன்பு, பாசம், காதல் என்ற வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே வருகிறது. கடமைக்காக வாழ்க்கையை நடத்தும் நிலையில் தம்பதியினர் தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ளனர். ஆனால் வயதான காலத்திலும் அதே காதலுடன் தனது துணையின் மீது அன்பை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் ஜோடிகளை நாம் பார்ப்பது அரிதிலும், அரிதானது தான்.
அதிலும் 90 வயதை கடந்தும், தனது அன்பிற்குரிய மனைவியை உருகி, உருகி காதலிக்கும் நபரை பார்த்தால் அதிசயமாக தோன்றாதா?, அப்படி ஒரு ஆச்சரியமூட்டும் ஜோடி தங்கள் காதலை வெளிப்படுத்தி, அதற்கு அன்பு பரிசும் பெற்றிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் ஜல்னா மாவட்டத்தில் அம்போரா ஜஹாகிர் கிராமத்தில் உள்ள ஒரு எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 93 வயதான நிவ்ருத்தி ஷிண்டே மற்றும் அவரது மனைவி சாந்தபாய். இவர்களுக்கு ஒரு மகன் இருந்த போதும் தங்கள் சொந்த உழைப்பின் மூலமே வயதான தம்பதி தனித்தே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
வயதானாலும் நிவ்ருத்தி ஷிண்டேவுக்கு தனது மனைவி சாந்தாபாய் மீதான காதல் மட்டும் என்றுமே குறையவில்லை. தன் அன்பு மனைவிக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று அவர் நீண்ட நாட்களாக நினைத்துகொண்டிருந்தார். இந்நிலையில் தனது மனைவிக்கு அன்பு பரிசு வழங்க நினைத்த நிவ்ருத்தி ஷிண்டே மும்பையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு மனைவியுடன் சென்றார். பெரிய நகைக்கடையின் உள்ளே இவர்கள் நுழைந்தவுடன் இவர்களின் தோற்றத்தை பார்த்த கடை ஊழியர்கள் இருவரும் பிச்சை கேட்டு கடைக்குள் நுழைந்துவிட்டதாக நினைத்தனர்.
ஆனால் தன்னிடம் இருந்த ரூ.1,120ஐ கடை ஊழியரிடம் கொடுத்த நிவ்ருத்தி ஷிண்டே தனது மனைவிக்கு இந்த பணத்தில் தாலி சங்கிலி வாங்க வந்துள்ளதாகவும் கூறினார். அதனை தன் மனைவிக்கு ஆசையாக கொடுக்க விரும்புவதாக கூறியதை கேட்டு நகைக்கடை உரிமையாளர் முதல் கடையில் இருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தார்.
வயதானாலும் அவர்களுக்குள் இருந்த ஆழமான அன்பான காதலால் ஈர்க்கப்பட்ட கடை உரிமையாளர் இந்த ஏழை வயதானவரின் விலை மதிப்பே இல்லாத காதலுக்கு ஈடாக விலை உயர்ந்த தங்கத்தை பரிசாக வழங்க முன்வந்தார்.
அதனால் நகைக்கடை உரிமையாளர் வயதான தம்பதியிடம் வெறும் ரூ.20 மட்டும் வாங்கிக்கொண்டு, தங்க தாலி சங்கிலியை அவர்களுக்கு பரிசாக வழங்கினார். இதனால் வயதான தம்பதியர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து ஆனந்த கண்ணீர் விட்டனர், இதனை கண்ட காண்போர் நெஞ்சமும் நெகிழ்ந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் மின்னல் வேகத்தில் வைரலாகி சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்களை ஈர்த்தது. தள்ளாத வயதிலும் அந்த 93 வயதான முதியவர் தனது மனைவி மீது கொண்ட அளவு கடந்த அன்பையும், நகைக்கடை உரிமையாளரின் மனிதாபிமான செயலையும் பாராட்டி வருகின்றனர்.