குடிசை வீட்டு இளவரசி: மாடலிங் கனவை நனவாக்கிய 14 வயது சிறுமி!

குடிசை வீட்டு இளவரசி: 
மாடலிங் கனவை நனவாக்கிய 14 வயது சிறுமி!

மும்பை தாராவியைச் சேர்ந்த மாலீஷா கார்வா என்ற 14 வயது சிறுமி, ஃபேஷன் உலகத்தைக் கலக்கி வருகிறார். உங்களுக்கு எளியவர்கள் வாழ்வில் முன்னேறி வெற்றி பெறுவது பிடிக்குமென்றால், இந்தச் சிறுமியின் கதையும் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

மும்பை தாராவியில் பிறந்து வளர்ந்தவர் மலீஷா கார்வா. இங்கு தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தாராவி என்றாலே அது ஏழை மக்களின் வாழ்விடம் என்பதுதான் அப்பகுதியின் அடையாளமாகிவிட்டது. உழைப்பாளர் களின் வசிப்பிடமான தாராவி இல்லையென்றால் ஒட்டுமொத்த மும்பை மாநகரமே ஸ்தம்பித்துவிடும். இப்படிப்பட்ட பகுதியில் இருந்து வந்த மலீஷா கார்வா என்ற 14 வயது சிறுமிதான் தற்போது மும்பை ஃபேஷன் உலகத்தை கலக்கத் தொடங்கி இருக்கிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு இசை ஆல்பம் தொடர்பான படப்பிடிப்புக்காக, ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மும்பைக்கு வந்திருந்தார். அப்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர் மும்பையில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பாந்திராவுக்கு சென்றபோது மாலீஷாவின் அறிமுகம் ராபர்ட் ஹாஃப்மேன் கிடைத்துள்ளது. பள்ளியில் சிறந்த மாணவியான மாலீஷா, சரளமாக ஆங்கிலம் பேசுவதிலும் வல்லவர். இதனால் ராபர்ட் ஹாஃப்மேனுக்கும் மாலீஷாவுக்கும் இடையிலான உரையாடல் எளிமையானது. சிறுமி மாலீஷாவின் முகபாவனையும், சிரிப்பும் ராபர்ட் ஹாஃப்மேன் கவர்ந்துள்ளது. இதனால், மாலீஷாவை வைத்து விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். மாலீஷாவிடம் காணப்பட்ட தனித்துவமான அழகு ராபர்ட் ஹாஃப்மேன் ஈர்த்தது.

இதைத்தொடர்ந்து மலீஷாவுக்கென்று பிரத்யேகமாக Go Fund Me பக்கத்தைத் தொடங்கிக் கொடுத்தார். அது மலீஷாவின் கலை மற்றும் இலக்குகளைத் தொடர்வதற்கு உதவியாக இருந்தது. அன்று முதல் மாடலிங் தொடர்பான தனது அனைத்து விருப்பங்களையும் இன்ஸ்டாகிராமில் மலீஷா பதிவேற்றி வந்தார். இன்ஸ்டாகிராமில் இவரை தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அவர் பதிவேற்றும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு "Princess from the slum" என்று மாலீஷா ஆஷ்டாக்கில் பதிவிடுப்பட்டுவருகிறது.

இப்போது அவருக்கு பாலிவுட் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே ஃபாரஸ்ட் எசன்ஷியல் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான, யுவதியின் விளம்பர மாடலாகவும் மலீஷா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தின் ஃபாரஸ்ட் எசன்ஷியல் நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூமுக்குச் சென்று, மலீசா பார்வையிட்ட வீடியோவும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, பள்ளி சீருடையில் ஒரு சிறுமியாக, மிகவும் எதார்த்தமாக ஃபாரஸ்ட் எசன்ஷியல் நிறுவனத்தின் ஷோரூம்களுக்குச் சென்று, தான் மாடலாக நடித்த விளம்பரங்களை மாலீசா பார்த்து மகிழ்ந்துள்ளார். 

இந்தக் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். "இதுவரை அட்டைப்படங்களில் பாலிவுட் பிரபலங்களின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது இது மாறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவர் பள்ளிக்குச் செல்கிறார் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் தொடர்ந்து தன் கல்வியிலும் கவனம் செலுத்துவார் என நம்புகிறோம்" என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த 14 வயது சிறுமியின் எழுச்சியூட்டும் கதையே போதும், ஒருவருக்கு கனவு என்பது எவ்வளவு முக்கியமானது மற்றும் அக்கனவுக்காக தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் அதில் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை உங்களுக்கு ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com