பள்ளித் தோழியிடம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காதலைச் சொன்ன 78 வயது முதியவர்.

பள்ளித் தோழியிடம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காதலைச் சொன்ன 78 வயது முதியவர்.

காதல் என்று சொல்லும்போதே அடிவயிற்றில் சிண்ட்ரெல்லா அழகாக வருடிச் செல்கிறாள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால், காதலுக்கு வயதும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் சுவாரசிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தனது பள்ளி தோழியிடம் 60 ஆண்டுகள் கழித்து தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் 78 வயது முதியவர். 

காதலுக்கு அழிவில்லை, எத்தனை வருடங்கள் ஆனாலும் இளம் வயதில் பூத்த முதல் காதலை ஒருநாளும் மறக்க முடியாது. முற்றிலும் உணர்வுபூர்வமான காதலை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. உலக சினிமாவில் காதலை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் பல திரைப்படங்களில் மிகவும் தத்ரூபமாக காதலை காட்சிப்படுத்தி இருப்பார்கள். இதற்கு விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 திரைப்படத்தை நல்ல உதாரணமாகக் கூறலாம். 

இப்படிப்பட்ட தத்ரூபமான காதல் கதை தான் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த 'தாமஸ்' மற்றும் 'நான்சி காம்பேல்' என்பவர் களுக்குள் நடந்துள்ளது. இவர்கள் பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்தபோது இருவருக்கும் ஈர்ப்பு இருந்துள்ளது. ஆனால், பிரேமம் படம் போல இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்களாலேயே கதை பேசி வந்துள்ளனர். பின்னர் பள்ளி படிப்பு முடிந்ததும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு கல்லூரி, திருமணம் என இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்படி வாழ்க்கை திசை மாறியது. இருப்பினும், இளம் வயதில் ஏற்பட்ட காதல் மனதில் ஒரு ஓரமாக இருக்க, பல வருடங்கள் கழித்து பள்ளிப் படிப்பை முடித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லா மாணவர்களும் மீண்டும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் தான் தாமசும் நான்சியும் மீண்டும் சந்தித்து இருக்கிறார்கள். 

அப்போது இருவருமே பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் இருவருக்கும் தனித்தனி குடும்பம் இருந்ததால் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் பிரிந்துவிட்டனர். அடுத்து 10 ஆண்டுகள் கழித்து 60வது ரீயூனியன் நிகழ்வில் மீண்டும் சந்தித்தனர். அப்போது இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்து வந்ததால், இருவருக்குமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனால் அந்த நிகழ்வின்போது இதைப் பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ளவில்லை. 

தனது காதலை எப்படியாவது நான்சியிடம் வெளிப்படுத்த எண்ணிய தாமஸ், தம்பா விமான நிலையத்திற்கு நான்சியை வரவைத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, தனது காதலை வெளிப்படுத்தினார். இளம் ஜோடிகள் தன் காதலை எப்படி வெளிப்படுத்துவார்களோ அதே பாணியில் 78 வயதான இந்த முதியவரும் தன் காதலை பொதுவெளியில் வெளிப்படுத்தியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இணையதளத்தில் இவர்களுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com