பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் இல்லம் அருகே இன்று வெடிகுண்டு கண்டறியப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் மேற்குப் படையும் இது குறித்து விசாரிக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
நேற்று மாலை 4.30 மணியளவில், ஹெலிபேட் அருகில் இருக்கும் மாம்பழ தோட்டத்தில் உள்ள கிணறு அருகே ஊழியர் ஒருவர் இந்த வெடிகுண்டைக் கண்டறிந்துள்ளார். இதையடுத்து உடனடியாக விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு வல்லுநர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா முதல்வர்களின் மாளிகையில் ஹெலிபேட் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகே இந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை கிளறியுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், முதல்வர் இல்லத்தில் இல்லை. இப்போது பஞ்சாப் போலீசார் அந்த வெடிகுண்டைச் செயலிழக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இப்போது பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத் தக்கது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ளதால் பஞ்சாப் எப்போதுமே பதற்றமான ஒரு இடமாகவே இருந்து வருகிறது. எல்லையில் இருந்து போதை மருந்து கடத்தலும் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இல்லம் அருகே இன்று வெடிகுண்டு கண்டறியப் பட்டுள்ளது பஞ்சாபில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.