இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு கண்டுபிடிப்பு!

Bomb used in World War II.
Bomb used in World War II.

ரண்டாம் உலகப்போர் நடந்தபோது ஜெர்மனியின் மீது அமெரிக்கா வீசிய குண்டு ஒன்று, சுமார் 78 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

நவீன உலக காலத்தில் இவ்வுலகம் சந்தித்ததிலேயே மிக மோசமான விஷயங்களில் இரண்டாம் உலகப்போரும் ஒன்றாகும். ஒட்டுமொத்தமாக இந்த போரில் மட்டும் 5 கோடி நபர்கள் வரை உயிரிழந்தனர். இதில் அதிக உயிரிழப்பு ரஷ்யாவுக்குதான். இந்த போருக்கு அடித்தளமாய் அமைந்தது ஜெர்மனி. ரஷ்யாவை ஜெர்மனி கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் முன்னேறி வந்த நிலையில், ஜெர்மனியுடன் ஜப்பான் கைகோர்த்து. மறுபுறம் ரஷ்யாவும் அமெரிக்காவும் இந்த இரு நாடுகளையும் எதிர்த்தன. 

ரஷ்யாவும் அமெரிக்காவும் போர்புரியும் முறைகள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ரஷ்யா, ஜெர்மன் வீரர்களை முன்னேறவிட்டு தாக்கியது. ஆனால் அமெரிக்கா, எடுத்தவுடன் தங்களின் எதிரிகள் மீது குண்டு மழை பொழிந்துவிடும். அப்படி ஜெர்மன் நாட்டின் மீது போடப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் அங்கேயே புதைந்திருந்தது. இவ்வாறு புதைந்த குண்டுகள் அவ்வப்போது ஜெர்மனியில் புதிய கட்டிடங்கள் கட்ட பள்ளம் தோண்டும்போது கிடைக்கும். இப்படிதான் ஜெர்மனியில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சுமார் ஒரு டன் எடை கொண்ட இந்த குண்டு கடந்த 78 ஆண்டுகளாக வெடிக்காமல் மண்ணுக்குள்ளேயே புதைந்து இருந்திருக்கிறது. இதேபோல கடந்த 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.  அவை அனைத்தும் பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டன. எனவே இந்த குண்டையும் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்க வைப்பதற்கு அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இதன் முதற்கட்டமாக இந்த குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள், "இதுவரை சுமார் 13,000 பேர் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டை இங்கேயே வெடிக்க வைக்க முடியுமா? அல்லது வேறு எங்காவது கொண்டு செல்ல வேண்டுமா? என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். தற்போது இந்த இடத்தை விட்டு வெளியேறுபவர்கள் தங்களின் வீட்டின் கதவு ஜன்னல்களை சரியாகப் பூட்டிவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இங்கேயே கொண்டு வெடிக்க வைக்கப்பட்டால் அதனால் வீட்டுக்குள் உள்ள பொருட்களுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு" எனத் தெரிவித்துள்ளனர். 

இந்த குண்டை அப்புறப்படுத்தும் செயல்முறை எப்போது நடக்கும் என்பது சார்ந்த எந்தத் தகவலும் இதுவரை உறுதியாகச் சொல்லப்படவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com