ஆப்கனில் எலும்பை உறைய வைக்கும் 'மைனஸ் 34 டிகிரி' குளிர்......?

ஆப்கனில் எலும்பை உறைய வைக்கும் 'மைனஸ் 34 டிகிரி' குளிர்......?
Published on

ஆப்கானிஸ்தானில்,கடந்த பத்து ஆண்டுகளாக இல்லாத அளவில், அதிக அளவில் பனிப் பொழிவும், கடுங்குளிரும் நிலவுகிறது.

குளிர் காய கூட வசதிகளில்லாமல் மக்கள் வாடுகின்றனர். மைனஸ் 34 டிகிரி குளிரில் உணவு, தண்ணீரின்றி தவிக்கின்றனர். குழந்தைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  இதுவரை இந்தக் கடுங்குளிருக்கு, ஆப்கனில், 162 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகம். கடந்த 17 தினங்களாக, நிலைமை மேலும் மோசமடைந்து வருவதால் மக்கள் கதறித் துடிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் தற்போது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாலிபான்கள் வசம் உள்ளது. அமெரிக்கா,2021ல், ஆப்கானை விட்டு வெளியேறிய பிறகு, தாலிபான்கள் உள்நாட்டுப் போரை நிகழ்த்தி, ஆப்கானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உலக நாடுகள், ஆப்கன் அரசை அங்கீகரிக்காத நிலையில், கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், மக்கள் வாழ்வு மோசமடைந்திருக்கிறது.

தாலிபான்கள் பெண்களுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதித்திருக்கின்றனர். கல்வி கற்கவும், வேலை பார்க்கவும் பெண்களுக்கு அனுமதியில்லை. இதுபோன்ற பிற்போக்கு நடவடிக்கைகளால், உலக நாடுகள், தாலிபானை அங்கீகரிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, இப்போது கடுங்குளிரும் சேர்ந்து வாட்டுவது கொடுமையிலும் கொடுமை.



மைனஸ் 34 டிகிரி(-29.2 ஃபாரன்ஹீட்) , குளிர் எலும்பு வரை ஊடுருவி உறைய வைக்கிறது.  தணல் காட்டி சூடேற்ற எதுவும் கிடைக்காத நிலையில், பகலில், தெருவில் சிதறிக் கிடக்கும் குப்பைகளைக் கொளுத்தி, குளிர் காய்கின்றனர். வீட்டிற்கு தேவையான எரிபொருள் வாங்கவும், சிரமப்படுகின்றனர். உணவு, குடிநீர் தட்டுப்பாட்டினால், மக்கள்,  குறிப்பாக குழந்தைகள், அதிக அளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் கடுங் குளிரினால் நடுங்குகிறார்கள்.

தொண்டு நிறுவனங்களில், பெண்கள் பணியாற்ற, தாலிபான்கள் தடை விதித்திருப்பதால், போதுமான பணியாளர்களின்றி, தொண்டு நிறுவனங்கள் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எந்தவித உதவியும் செய்ய முடியவில்லை.

இதுபற்றி, பேரிடர் மேலாண்துறையின் செய்தி தொடர்பாளர்,  ஷபியுல் ரஹ்மி, "கடந்த 10ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, 162 பேர் இறந்திருக்கிறார்கள்‌ ஒருவாரத்தில் மட்டும், 84 பேர் இறந்திருக்கிறார்கள்." எனத் தெரிவித்தார்.
நிலைமை மாறி, ஆப்கானிஸ்தான் மக்கள், நலமுடன் வாழ வேண்டும் என்பதே  அனைவரின் வேண்டுதல் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com